Wednesday 15 March 2017

பெண் தன்னிலைகளின் அகப்புற பரிமாணம் - நவீனப் பெண் தன்வரலாற்றுப் புனைவுகளினூடான வாசிப்பு

பெண் தன்னிலைகளின் அகப்புற பரிமாணம்
(நவீனப் பெண் தன்வரலாற்றுப் புனைவுகளினூடான வாசிப்பு)
    மு.செல்லமுத்து
    தமிழியற்புலம்
    முனைவர்ப்பட்ட ஆய்வாளர்
    மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
    மதுரை – 21
Email : cmchellamuthu.muthu83@gmail.com

                நிலவென்றும், மலரென்றும் வர்ணிக்கப்படும் பெண்களின் குணம் மென்மை என காலம்காலமாகக் கூறப்பட்டு வருகிறது. அந்தவகையில், நெருப்பை உமிழும் சூரியனாக வாழ்க்கை களவாடப்படும்போது எல்லாப் பெண்களுமே நிலவாக இருப்பதில்லை. சிலர் நெருப்பை உமிழும் சூரியனாகவே மாறுகிறார்கள். அவ்வாறு பெண்களின் மறைக்கப்பட்ட கொடும் வாழ்க்கையைப் பதிவு செய்யும் உலகளவிலான படைப்புகள் பல தமிழிலும், தமிழ் மொழிபெயர்ப்புகளிலும் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆண் பெண் என்ற இருநிலையில் பொதுவாக வரலாறு என்பது வெற்றிகளின் தொகுப்பாகவும் ஆண்களின் வீரதீர சாகசங்களைப் பேசும் ஒரு ஆவணமாகவே நெடுங்காலமாகவே நம்கண்முன் எல்லாநிலையிலும் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பெண்களின் பார்வையில் இவர்களுக்கான அனுபவ வரலாறுகள் எழுதப்படுவது மிக மிகக் குறைவுதான். இவர்களின் மனதிற்குள் தன் வாழ்வனைத்தையும் போட்டு மக்கவைத்து செத்துப் போவதே மேன்மை என்றுதான் இன்றுவரை வீடுகள்தோறும் போதிக்கப்பட்டு வருகிறது. எனவேதான், பெண் சுயசரிதைப் படைப்புகளின் அகப்புற பரிமாணங்களை இன்றைய சூழலில் பல்வேறு கோணங்களில் ஆராயவேண்டியுள்ளது. அந்தவரிசையில் கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் ஆளற்ற பாலம்’ (தமிழில். கௌரி கிருபானந்தன், காலச்சுவடு பதிப்பகம்), வாரிஸ் டைரியின் பாலைவனப் பூ’ (தமிழில் - எஸ்.அர்ஷியா, எதிர் வெளியீடு), மலாலா யூசுஃப்ஸை மற்றும் கிறிஸ்டினா லாம்ப் இணைந்து எழுதிய நான் மலாலா’ (தமிழில் - பத்மஜா நாராயணன், காலச்சுவடு பதிப்பகம்), தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில்’ (தமிழினி காலச்சுவடு பதிப்பகம்), ஊர்மிளா பவாரின் முடையும் வாழ்வு’ (தமிழில் - போப்பு, விடியல் பதிப்பகம்), லட்சுமி அம்மாவின் லட்சுமி என்னும் பயணி’ (மைத்ரி பதிப்பகம்), கமலாதாஸின் என் கதை’ (தமிழில் - நிர்மால்யா, காலச்சுவடு பதிப்பகம்) ஆகிய பெண்களின் படைப்புகள் பல்வேறு சமூக்கட்டுமானங்களை உடைத்துவிட்டு அண்மையில் வெளிவந்திருக்கும் தன்வரலாற்று நூல்களாகும். இச்சுயசரிதைப் படைப்புகளினூடான விமர்சனங்களையும் சில கருத்துரைகளையும் முன்வைத்துப் பேசுவதற்கு இக்கட்டுரையில் முயற்சித்துள்ளேன்.
நான் மலாலா - ஒரு வாழ்க்கை சித்திரம் (சுயசரிதை)
எல்லையில் பதட்டம் நிலவி வரும் இன்றைய சூழலில் மலாலாவின் சுயசரிதை குறித்து நாம் அறிந்திருப்பது சற்று அவசியமே. மேற்கத்திய ஊடகங்களின் செல்லப்பிள்ளையாக உலகெங்கும் மலாலா கொண்டாடப்பட்ட காலத்தில், என் முன் நிறுத்தப்பட்ட பிம்பம் ஒன்றும் அத்தனை ஏற்புடையதாக இல்லை. குழந்தைகளின் இளமையையும் அவர்களின் துடுக்குத்தனத்தையும் களவாடி வாழ்க்கை வணிகத்திற்கு தேவையான சரக்கு மூட்டைகளை முதுகில் ஏற்றி முதிரா இளம் பருவத்திலேயே போட்டிக் களத்தில் இறக்கி ஓடவிட்டு ஆராதிக்கும் அன்னையர்களும் தந்தையர்களும் நிறைந்த சமூகத்தில் பலிகடா ஆவதென்னவோ குழந்தைகள்தான். தம் பிள்ளைகள் பிறவி மேதைகள் என்று நம்பும் உரிமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டுதான் எனினும், பெரும்பாலும் அவர்களுடைய நியாயமற்ற எதிர்பார்ப்புகளின், கனவுகளின் சுமையில் மழலை மேதைகள் தங்கள் சுயத்தை கண்டறிவதற்கு முன்னரே போலியான பாவனைகளில் தங்களை இழந்து சுவடின்றி மறையும் நிகழ்வுகள்தான் இங்கு மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மலாலாவும் அரசியல் காரணங்களுக்காக அப்படி ஊதிப்பெருக்கப்பட்ட பிம்பம் என்றொரு மனயெண்ணம் எனக்கிருந்தது. அதன் பின்னர்தான் மலாலாவுடன் இணைந்து இங்கிலாந்தின் கிறிஸ்டீனா லாம்ப் என்பவர் எழுதி வெளியிட்ட நான் மலாலாஎன்ற நூலினை வாசிக்கத் தொடங்கினேன். எனது மன எண்ணத்தை  மறுபரிசீலனை செய்ய வைத்தது அவருடைய இந்நூல்.
ஏனெனில், மலாலாவின் சுயசரிதை அவருடைய வாழ்க்கைக்கதை என்பதைத் தாண்டி இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கோரமுகத்தை ஆவணப்படுத்தியுள்ளது. புறத்தோற்றம் வேறாக இருப்பினும், உலகெங்கும் அடிப்படைவாதத்தின் குரல்கள் ஒன்றுபோலத்தான் ஒலிக்கின்றன. பாகிஸ்தானிலுள்ள ஸ்வாத் சமவெளியில் யூசுப்சாய் குழுவைச் சேர்ந்த ஜியாவுதீனுக்கும் டோர் பீகாய்க்கும் அக்டோபர் 12, 1997 அன்று பிறந்த முதல் குழந்தைதான் மலாலா. யூசுப்சாய் என்பது அப்பகுதி பெரும்பான்மை பழங்குடி இன மக்களின் கூட்டுப் பெயர். பெண் குழந்தைகளைச் சுமையாக பார்க்கும் சமூகத்தில், ஆண் வாரிசுகளை மட்டும் தலைமுறை தொடர்ச்சியில் இணைக்கும் போக்கிற்கு மாறாக ஜியாவுதீன், தனது மகள் மலாலாவின் பெயரையும் இணைக்க ஆசைகொண்டார். இவர் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட ஒரு கவிஞர், சிந்தனையாளர், கல்விநிறுவனங்களை நடத்துபவர்;, மதவெறியாளர்களுக்கெதிரான எண்ணம் கொண்டவர். 1880 களில் வெடித்த இரண்டாம் ஆங்கிலேய - ஆப்கானிய போரில் மேவாந்த் (அநறையனெ) மாகாணத்து மலாலாய் எனும் பெண், ஆப்கானிய பஷ்தூன்களுக்கு பெரும் ஊக்கமாக திகழ்ந்தார், இன்றளவும் பெரும் நாயகியாக அவர் போற்றப்படுகிறார். அவருடைய நினைவாகத்தான் தன் மகளுக்கு மலாலா எனப் பெயர்சூட்டினார் ஜியாவுதீன். பாகிஸ்தானிலுள்ள மின்கோரா எனும் நகரத்தில் பிறந்து வளர்ந்து, தந்தை உருவாக்கிய பள்ளியிலேயே கல்விகற்றவர் மலாலா. மலாலாவின் சிந்தனைப் போக்கிலும், கருத்திலும் ஜியாவுதீனுக்குப் பெரும்பங்கு உண்டு. சிறுவயது முதலே மலாலாவின் கருத்தோட்டத்தைக் கூர்மைப்படுத்தியவர் ஜியாவுதீன்.
அமைதியும் அழகும் ததும்பும் ஸ்வாத் சமவெளியில் இன்றும் மக்கள் வாழ்வதற்கே அஞ்சுகிறார்கள் என்றால் தாலிபான்களும், பாகிஸ்தானிய ராணுவமும், உளவமைப்பும், அமெரிக்க ராணுவமும் அவரவர் வழியில் தங்கள் இருப்பையும் பாதுகாப்பையும் நிலைப்படுத்திக்கொள்ள விளையாடும் போர்க்களமாக ஸ்வாத் பகுதி மாறிப்போனதுதான் இதற்குக்காரணம். மலாலாவின் குரல் தேசப்பற்று மிக்க பாகிஸ்தானியின் குரலாக இருந்தாலும், பஷ்தூன்களின் தேசிய அடையாளத்தை நிராகரித்து பெரிதாக இவர் எதுவும் எழுதவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இந்திய பாகிஸ்தான் உறவும், காஷ்மீர் பிரச்சனையும் அங்கு பெரும்பான்மை மக்களுக்கு என்ன புகட்டப்படுகிறதோ அப்படித்தான் இவரும் புரிந்துகொண்டுள்ளார். ஆனால், அவற்றையெல்லாம் கடந்து ஒருவேளை நாம் இந்தியாவைவிட்டு பிரியாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? என்று தந்தையிடம் வினவுகிறார். பாகிஸ்தான் உருவாவதற்கு முன்னர் இந்துக்களும் இஸ்லாமியர்களும் எப்போதுமே சண்டையிட்டுக் கொண்டிருந்தனர் என்ற எண்ணமே எனக்கிருந்தது. ஆனால், எங்களுக்கான தேசம் கிடைத்த பின்னரும் சண்டை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இம்முறை மொஹாஜீர்களுக்கும் பஷ்தூன்களுக்கும் இடையிலும், சன்னிக்களுக்கும் ஷியாக்களுக்கும் இடையிலும் அடிக்கடி பிரிவினை ஏற்பட்டு பலூசிஸ்தானில் போர் நடந்துகொண்டுதானிருக்கிறது. இதுபோன்ற போர்களின் காரணமாக எமது தேசத்தை மீண்டும் துண்டாக்க வேண்டியிருக்குமோ?” எனும் அச்சம் கலந்த கேள்வியையும் மலாலா தனது நூலில் எழுப்பியுள்ளார்.
பாகிஸ்தானின் ஸ்வாத் பகுதியில் தாலிபான்கள் செல்வாக்கடையத் தொடங்கியதும், பல கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினர். மீறுபவர்களுக்கு தண்டனைகளும் வழங்கப்பட்டன. அப்படி அவர்கள் முன்வைத்த ஒரு விதிமுறைதான் பெண்கள் கல்வி கற்கக் கூடாதென்பது. இவர்களால் பல பள்ளிகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. ஸ்வாத் சமவெளியில் தாலிபான் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலகட்டத்தினை ஆவணப்படுத்துவதற்காக ஆயிஷா என்ற பெண் முதலில் பிபிசிக்காக எழுதுவதாக ஒப்புக் கொண்டாலும், தங்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று கருதிய ஆயிஷாவின் பெற்றோர் அவரை எழுதவிடவில்லை. மாற்று ஆளாக மலாலா தேர்ந்தெடுக்கப்பட்டாள். பள்ளி செல்ல முடியாத தனது அனுபவங்களை எழுதத் தொடங்கியபோது மலாலாவுக்கு வயது 11. ஏற்கெனவே ஒப்புக் கொண்டிருந்த பெண்ணை விட 4 வயது குறைவான மலாலா அப்போது ஏழாம் வகுப்புதான் படித்துக் கொண்டிருந்தாள். எனினும் பிபிசி ஒப்புக் கொண்டது. தாலிபான்களால் பிரச்சினை எழும் என்பதால், 2009 ஜனவரி 3 - ஆம் தேதி முதல் குல்முகாய் என்ற புனைப்பெயருடன் பிபிசி இணையதளத்தில் உருது மொழியில் எழுதத் தொடங்கினாள் மலாலா. நேற்றிரவு இராணுவ ஹெலிகாப்டர்களும், தாலிபான்களும் நிறைந்த ஒரு கொடுமையான கனவு கண்டேன். ஸ்வாட் பள்ளத்தாக்கில் இராணுவ நடவடிக்கைகள் தொடங்கிய காலத்திலிருந்து இப்படி கனவுகள் எனக்கு வருகின்றன. அம்மா செய்துவைத்த காலை உணவை முடித்துக் கொண்டு பள்ளிக்குக் கிளம்பினேன். பெண்குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு தாலிபான்கள் தடைவிதித்திருப்பதால் எனக்கு பள்ளிக்குச் செல்ல பயம் இருந்தது. 27 பேரில் 13 பேர் தான் பள்ளிக்கு வந்திருந்தனர். தாலிபான்களின் தடையால் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது. இந்தத் தடைக்குப் பின்னர் எனது மூன்று தோழிகள் தங்கள் குடும்பத்துடன் பெஷாவருக்கும், லாகூருக்கும் ராவல்பிண்டிக்கும் குடிபெயர்ந்து விட்டார்கள். வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும் வழியில், உன்னைக் கொன்றுவிடுவேன் என்று ஒருவர் கத்தும் குரல் கேட்டது. நான் எனது வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டு, பின்னால் அவர் என்னைத் தொடர்கிறாரா என்று திரும்பிப் பார்த்தேன். எனக்குக் கொஞ்சம் நிம்மதியளிக்கும் விதமாக, அவர் யாருடனோ செல்பேசியில் பேசி, அவரை மிரட்டிக் கொண்டிருந்தார். இப்படித் தொடங்குகிறது மலாலாவின் டைரிக்குறிப்பு.
மலாலாவின் அன்னை உட்பட பெண்கள் பலரும் அவருக்கு ஆதரவளித்தனர். இதற்கு உலகெங்கிலும் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், பெண் கல்வியின் உயரிய அடையாளமாக உலகெங்கும் மலாலா அறியப்பட்டார். எனவே, தாலிபான் அவருடைய உயிருக்கு குறிவைத்து, அக்டோபர் 9, 2012 அன்று பள்ளி முடித்து வீடு திரும்பும்போது பள்ளி பேருந்தில் முகம் மூடிய தாலிபான் ஒருவரால் சுடப்படுகிறார். சுடப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் மலாலாவின் மண்டைஒட்டை ஓரமாக உடைத்துக்கொண்டு அவர் தோள்பட்டைக்குள் புகுந்துவிடுகிறது. மேலும், மலாலாவிற்கு அருகில் அமர்ந்திருந்த இரு சிறுமிகளும் குண்டடிபடுகின்றனர். கவலைக்கிடமான நிலையில் உயிர்காக்கும் சிகிச்சைக்காக பிரித்தானியாவில் உள்ள பிர்மிங்காம் நகரத்து ராணி எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு எதிர்பாராதவிதமாக உயிர் பிழைக்கிறார் மலாலா. இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இவரைச் சுட்ட தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு தரப்படுமென்று கைபர் - பாக்டுன்கவா மாநில அரசு அறிவித்தது. மலாலாவின் உடல் நிலையில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டபோது ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீமூன், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் உள்ளிட்ட எண்ணற்ற உலகத் தலைவர்களும், மடோனா, ஏஞ்சலின ஜோலி, அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ்ஷின் மனைவி லாரா புஷ் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்தவர்களும் மனித சமூகத்தின் சரிபாதியான பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படும் சூழல் உலகிற்கு பெருமை தரக்கூடியதல்ல என தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
அடிப்படைவாதிகளுக்கும் சரி சுதந்திரச் சிந்தனை கொண்ட பகுத்தறிவுவாதிகளுக்கும் சரி சிந்தனைக் கொந்தளிப்புகள் பெரிதாக இருக்காது. கண்மூடித்தனமான எளிய நம்பிக்கையோ நேர்கொண்ட சிந்தனையோ, ஏதோ ஒன்று அவர்களின் எல்லாவற்றையும் வழிநடத்தும். ஆனால் இதற்கிடையில் சிக்கும் சாமானியர்கள், தொன்மையான நம்பிக்கைகளையும் மீற முடியாமல், பகுத்தறிவின் கேள்விகளையும் எதிர்கொள்ள முடியாமல், ஒவ்வொரு நொடியும் சமரசம் செய்துகொண்டாக வேண்டும். மலாலாவிற்கும் அத்தகைய சில தத்தளிப்புகள் இருக்கத்தான் செய்கிறது. ஒருவகையில் இத்தகைய தத்தளிப்புகளே அவரை சாமானியராக, மனதிற்கு நெருக்கமாக ஆக்குகிறது. மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று மீண்டபோது பொழுதுபோக்கிற்காக அவருக்கு ஒரு டி.வி.டி வழங்கப்பட்டது. அப்போது மலாலா டீநனெ வை டுமைந டீநஉமாயஅ எனும் திரைப்படத்தை காண நேர்ந்த அனுபவத்தை எழுதுகிறார். கலாசார இறுக்கங்களை எதிர்த்து கால்பந்து விளையாட முயன்ற சீக்கிய பெண் பற்றிய கதை எனக்கு ஊக்கமளிக்கும் என்று எண்ணியிருக்கலாம். அதில்வரும் பெண்கள் தங்கள் மேலாடைகளை துறந்து, விளையாட்டுக்குரிய உள்ளாடைகளுடன் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்ட காட்சியைக் கண்டு அதிர்ந்துவிட்டேன். செவிலியர்களிடம் கூறி அதை அணைக்கச் சொன்னேன்.எனக் குறிப்பிடுகிறார். மேலும், நியூயார்க் டைம்ஸ் ஆவணப்படத்துக்குப் பிறகு, பல செய்தி நிறுவனங்களிலும் மலாலாவின் பேட்டிகள் இடம்பெற்றன. அவ்வாண்டு டிசம்பர் வாக்கில் பிபிசியில் கட்டுரைகள் எழுதியது மலாலா தான் என்பது வெளியானது. மெல்ல மெல்ல ஊடகங்களின் கவனிப்பிற்கும், மதவெறியர்களின் கண்டனத்திற்கும் மலாலாவும், அவரது தந்தையும் ஆளாகத் தொடங்கினார்கள். பெண் கல்விக்கும், மனித உரிமைக்கும் ஆதரவாகத் தனது குரலை தொடர்ந்து எழுப்பத் தொடங்கிய மலாலா குழந்தைகள் பாராளுமன்றத்தின் தலைவராக பங்கேற்ற வீடியோ காட்சி வெளியானது. 2011 - ல் உலகப் புகழ் பெற்ற டெஸ் மாண்ட் டூட்டு உலக அமைதிக்கான குழந்தைகள் பரிசுக்கு மலாலாவின் பெயரைப் பரிந்துரைத்தார். அதே ஆண்டு டிசம்பரில் பாகிஸ்தானின் தேசிய இளைஞர் அமைதிப் பரிசு மலாலாவுக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் 2013 ஆம் ஆண்டு ஜூலை 12 இல் தனது 16 ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு தாலிபான்களைப் பற்றியும், பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும் உரையாற்றுகிறார் மலாலா. இந்நிகழ்வை ஐக்கிய நாடுகள் "மலாலா தினம்" என அறிவித்தது. மேலும், உலகம் முழுவதும் பெண்கள் கல்வி உரிமைக்காக போராடி வரும் மலாலாவுக்கு ஐ.நா சபை உள்பட பல்வேறு நாடுகள் விருதுகளும், பரிசுகளும் பாராட்டும் வழங்கி கவுரவித்தது. இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும் பாகிஸ்தானின் மலாலாவிற்கும் 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்வுக்குப் பின்னர் உலகெங்கிலும் உள்ள பல்வேறு அமைப்புகள் இன்றும் அவரை கவுரவித்த வண்ணம் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள பெண் குழந்தைகளின் கல்வி உரிமைக்காக நான் மலாலாஎன்றொரு திட்டத்தை அறிவித்து, உலகநாடுகளில் பல்வேறு காரணங்களால் பள்ளி கல்வியை தொடர முடியாமல் போன 61 மில்லியன் குழந்தைகளுக்கு 2015 ஆம் ஆண்டுக்குள் கல்வியளிக்கபட வேண்டும் என அறிவுறுத்தியது.
இதுபோன்ற சர்வதேச அரசியல் பின்னல்களுக்கு அப்பால், மலாலாவின் சுயசரிதை என்பது ஒரு சிறுமி தனக்கான அல்லது தன்னையொத்த சிறுமிகளுக்கான ஒரு சுதந்திர வெளியை தக்கவைத்துக்கொள்ள நடத்தும் போராட்டமாக ;நான் மலாலாஎன்னும் நூல் வெளிவந்துள்ளது. ஏனெனில், தோழிகளும், சின்னச் சின்ன ஊடல்களும், விளையாட்டுகளும், தொலைக்காட்சியும், அழகுசாதனங்களும், பள்ளியும், புத்தகங்களும், கணினியும் மட்டும் ஸ்வாத் சமவெளியின் இஸ்லாமிய சிறுமி மலாலா என்றில்லை. உலகெங்கிலும் பதின்ம வயதை எட்டும் சிறுமிகளின் எண்ணம் இப்படிதான் இருக்கிறது. நியாயமான இந்த வாழ்க்கைக்குதான் மலாலாவும் ஏங்குகிறார். பாகிஸ்தானில் பெண்கள் சுதந்திரம் வேண்டும் எனக் கூறினால், நாங்கள் எங்கள் தந்தையர், சகோதரர், அல்லது கணவர் சொல்பேச்சை கேட்க விரும்பவில்லை என்று மக்கள் எண்ணிக் கொள்கின்றனர். ஆனால், உண்மை அதுவல்ல. எங்கள் வாழ்க்கை முடிவுகளை நாங்களே எடுக்க வேண்டும் என விரும்புகிறோம். நாங்கள் பள்ளிக்குச் செல்லவோ அல்லது பணிக்குச் செல்லவோ சுதந்திரம் வேண்டும் என்கிறோம். குர்ரானில் எங்குமே பெண்கள் ஆண்களை நம்பித்தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படவில்லைஎன்பதையும் சுட்டிக்காட்டுகிறார். மேலும், தன் தோற்றம் பற்றிய தாழ்வுணர்ச்சி இருந்ததால், சக பஷ்தூன் பெண்களை போல் உயரமில்லை, நிறமில்லை மேடையில் ஏறி நின்று பேசும்போதுகூட மக்கள் தன்னைக் காண முடிவதில்லை என்பதை நினைத்து வருத்தமடைகிறார். இதற்காக தானொரு இரண்டங்குலம் உயரமாக வேண்டுமென அல்லாவிடம் வேண்டுகிறார். தாலிபான் தாக்குதலில் இருந்து உயிர்பெற்று மீண்டபிறகு நான் இறைவனிடம் ஓரிரு அங்குலங்கள் உயர வேண்டும் என வேண்டிக் கொண்டதுண்டு. ஆனால், இன்று என்னை வானளவில் அளக்கவியலா உயரத்தில் நிறுத்திவிட்டான். இது அபூர்வமான உயரம், அதேநேரத்தில் ஆபத்தான உயரமும்கூட என வியக்கிறார் மலாலா.
இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்றதுமுதல் இன்றுவரை பல்வேறு இக்கட்டுகளை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானின் தந்தை ஜின்னா 1948 ஆம் ஆண்டிலே மறைந்தார். அதன் பின்னர் லியாகத் அலிகானின் மரணம். பின்னர் ஜியா உல் ஹக்கின் ராணுவ ஆட்சி. ஜுல்பிகார் அலி புட்டோவின் மரணம். முஷரப்பின் ராணுவ ஆட்சி என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், ராணுவமும், உளவமைப்பும் ஆளுக்கொரு பக்கம் தேசத்தை இழுத்துச் சென்றது. தாலிபான்கள் இவற்றையெல்லாம் மாற்றி தமது தேசத்தில் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவர் என பாகிஸ்தான் மக்கள் நம்பினர். ஆனால், வெளியுலகமும் அமெரிக்காவும் தாலிபான்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. அமெரிக்கா ஒசாமாவைப் பிடிக்க பாகிஸ்தான் அரசின் உதவியை நாடியது. தேடுதல் வேட்டைக்காக பில்லியன் டாலர்களை நிதியாக அளித்துக் காத்திருந்தது. பாகிஸ்தான் உளவுப்பிரிவின்மீதும் ராணுவத்தின்மீதும் நம்பிக்கை இழந்த அமெரிக்கா ஸ்வாத் பகுதியில் எட்டாண்டுகள் பதுங்கி இருந்த ஒசாமாவை பாகிஸ்தான் நிலப்பரப்பிற்குள் தாமாக இறங்கி சுட்டு வீழ்த்தியது. பாகிஸ்தான் அரசிற்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்திற்கு அருகிலேயே, அந்நாட்டின் தலைநகரமான இஸ்லாமாபாதில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபோட்டாபாதில்தான் இறுதியாக ஒசாமா கொல்லப்பட்டார். அதன்பின்னர் ஜமாத் உல் தவா, லஸ்கர் ஈ தொய்பா போன்ற அமைப்புகளுக்கு இருக்கும் மக்கள் பின் லேடனுக்கு ஆதரவாக தொழுகைகளும், ஊர்வலங்களும், அஞ்சலி கூட்டங்களும் நடத்தி பாகிஸ்தானில் அவரை ஒரு தியாகி அளவிற்கு பாவித்தனர். ஏனெனில், இங்கு நிலநடுக்கம் நேர்ந்தபோது பாகிஸ்தான் அரசாங்கம் சரிவர நிவாரண பணிகளை செய்ய இயலாதபோது, ஜமாஅத் உல் தவாதான் பெரும் பணிகளை செய்து மக்களை மீட்டு அவர்களுக்கு பெரும் ஆதரவளித்ததாகக் குறிப்பிடுகிறார் மலாலா.
ஏனைய நண்பர்களைப் போல் தானும் ஒரு மருத்துவராக வேண்டுமென்ற விருப்பத்தினூடே, பெனாசிர் புட்டோவின் வருகை அவரைப் போன்ற அரசியல்வாதியாக மாறவேண்டும் என்ற கனவையும் அவருக்குள் உருவாக்கியது. ஆனால், பெருத்த நம்பிக்கையுடன் எதிர்நோக்கப்பட்ட அவருடைய வருகை மரணத்தில் முற்று பெற்றது அவரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. லால் மஸ்ஜித்மீது நடைபெற்ற தாக்குதல், இரண்டாம் ஸ்வாத் போர், அதையொட்டி நிகழ்ந்த பெனாசிர் புட்டோவின் மரணம், ஒசாமா பின் லேடனின் மரணம், ஜெனரல் கியானி, ஆசிப் அலி சர்தாரி போன்றோரை சந்திக்க நேர்ந்த நிகழ்வுகள் என மலாலா தன் வாழ்நாளில் கடந்துவந்த சம்பவங்களை தனதுநூலில் பரவலாக பதிவுசெய்துள்ளார்.
எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம் எனும் அச்சம் அவருக்கு இருந்தது. ஒருகால் தாலிபான்களை எதிர்கொள்ள நேரிட்டால் என்ன செய்வது? என்பது குறித்து அவர் சிந்திக்கிறார். செருப்பை கழட்டி அடிக்க வேண்டும் என்று எண்ணுகிறார். ஆனால் அப்படி செய்தால் தனக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு என்றும் யோசிக்கிறார். தன்னை கொல்ல வருபவனிடம் தான் பேச முடியும், தனது நியாயத்தை உணர்த்த முடியும் என்று நம்பினார். சுடப்பட்ட பிறகு, தன்னை சுட்டவன் மீது தனக்கு தனிப்பட்ட கோபம் என ஏதுமில்லை. அவனுடைய பிள்ளைகளுக்கும் சேர்த்துதான் தான் போராடுகிறேன். எனவே, “நான் தாலிபானால் சுடப்பட்டவள் என அறியப்பட விரும்பவில்லை மாறாக பெண்கல்விக்காக போராடியவள் என்றே அறியப்பட விரும்புகிறேன்என்கிறார். உண்மையில் அவருக்குள் ஏதோ ஒரு ஆற்றல் உறைந்திருக்கிறது என்பதை இவ்வரிகள் என்னுள் விளங்கவைத்தது.
மேலும், அமெரிக்க சி.ஐ.ஏ உளவாளி என வசைபாடப்பட்டும், பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றியும், பெண்கல்வி பற்றியும் அவர் கூறிய கருத்துக்களுக்காக உள்ளூரில் கடுமையாக விமர்சிக்கபட்டார். பாகிஸ்தான் தாலிபான் தலைவர் எழுதிய கடிதத்தில், பெண் கல்வியை ஆதரித்ததற்காக அவரைக் கொலைசெய்ய முயற்சிக்கவில்லை, அவர் மேற்கத்தியமயமாக்கலை ஆதரிக்கிறார் என்பதாலே கொலைசெய்ய ஆணையிடப்பட்டது என்கிறார். உள்ளுர் வலைத்தளங்களும், ஊடகங்களும் இதில் பெரும் சதி இருப்பதாகக் கூறினார். மேலும், மலாலா சுடப்படவே இல்லை என்றும், அமெரிக்க டிரோன் தாக்குதல்களுக்கு சாக்காக நடத்தப்பட்ட நாடகம் என்று கூட பேசப்பட்டது. நோபல் பரிசுக்கு மலாலா பரிந்துரைக்கப்பட்டபோதுகூட அங்கு ஒருவித மவுனமே நிலவியது. எவ்வாறாயினும் தனியொரு சிறுமியாக மனதிற்குச் சரியெனப்பட்டதை எவருக்கும் அஞ்சாமல் துணிவுடன் குரல் எழுப்பியதே மிகப்பெரிய சாதனைதான். எனவே, மலாலாவிற்கு கிடைத்த பாராட்டும் அங்கீகாரமும் நியாயமானதே என்பதனை வாசிப்பினூடே எண்ணுகிறேன்.
'ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு தெருவிலும், கிராமத்திலும், நாட்டிலும் அமைதி நிலவ வேண்டும் - இது என் கனவு. உலகில் உள்ள ஒவ்வொரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் கல்வி அவசியம். பள்ளியில் தோழிகளுடன் உட்கார்ந்து பாடங்களைப் படிப்பது என்னுடைய உரிமை. மனிதகுலத்தில் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியின் புன்னகையோடு இருப்பதைப் பார்க்க வேண்டும் என்பது எனது விருப்பம்.' என்கிறார் மலாலா. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, முதல் பாகிஸ்தானியப் பெண்; என்ற பெருமைகள் மலாலாவுக்கு உண்டு. அவர் பெற்றிருக்கும் சர்வதேச விருதுகளின் பட்டியல் மிக நீளம். துப்பாக்கியால் துளைக்கப்பட்ட போதும் உறுதி குலையாமல் கோடிக்கணக்கான பெண் குழந்தைகளின் மறுக்கப்பட்ட கல்விக்காக உலகின் பல பகுதிகளிலும் ஒலிக்கிறது மலாலாவின் குரல்! மலாலா எழுப்பியிருக்கும் குரல் உலகெல்லாம் ஒலிக்க வேண்டிய ஒன்று. இந்தியாவில் தந்தை பெரியார் எழுப்பிய குரல் இன்று உலகெங்கும் கேட்பதுபோல!


கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் - ஆளற்ற பாலம்
இயக்கங்களின் வரலாறு பொதுமக்கள் வாழ்க்கைப் பரப்பிற்குள் கட்டமைக்கப்படுகிறது. அவ்வாறு கட்டமைக்கைப்பட்ட வரலாற்றில் அடங்கும் மனிதர்கள். இயக்கங்களை வழிநடத்துகிறார்கள். ஆளற்ற பாலம்என்ற கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் சுயசரிதை இதனை மையமாகக் கொண்டது. பொதுவுடமைக் கட்சியின் ஒரு குறிப்பிட்ட கால நிகழ்வை, சமகாலத் தலைவர்களின் நடப்புகளுக்குச் சாட்சி கூறும் நூலாக இது அமைந்துள்ளது. மேலும், அக்காலப்பெண்ணின் முழுவாழ்வும் இந்தத் தன்வரலாற்றில் பொதிந்து கிடப்பதனை வாசிப்பினூடே பயணப்படுகையில் உணரமுடிகிறது. மக்கள் பரப்பில் சமத்துவத்தையும் மறுமலர்ச்சியும் உருவாக்க உழைத்தவர்களின் உண்மைத் தடங்கள்தான் இந்நூல். மேலும், பெண்களும் தலித்துகளும் தொழிலாளர்களும் ஒடுக்கப்படுகிற காலத்தில், மீட்சிக்காய்ப் போராடிய இயக்கங்களின் வரலாறு இது. தெலுங்கிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துத் தந்த கௌரி கிருபானந்தனின் சிறந்த இம்முயற்சி பாராட்டுதலுக்குரியது.
நான் ஒரு பெரிய ஆளோ, எழுத்தாளரோ இல்லை. நினைவுகளைத்தட்டி எழுப்பினால் கண்ணீர் ஊற்று பொங்கி வரும் வாழ்க்கை என்னுடையது. ஈரமாக இருக்கும் அந்த எழுத்துகளைப் பொருள் பொதிய காகிதத்தின் மீது வடிக்க என்னால் முடியுமா என்று தயங்கினேன். அதனால்தான் இத்தனை நாட்களாக முயற்சி செய்யவில்லை.என்று, கோடேஸ்வரம்மா தன்வரலாற்று நூலின் முன்னுரையை தன்னடக்கத்தோடு வழங்கியுள்ளார். இவரது எழுத்துக்களை வாசிக்கத் தொடங்கினால் இறுதி பக்கம் முடிக்கும் வரை இந்நூலினை கீழே வைக்கத் தோன்றாது. அவருடைய இதயத்தின் அடியாழத்திலிருந்து பொங்கி வரும் சோக வெளிப்பாடுகள்; வாசிப்பவர் நெஞ்சை அத்தனை நிலைகுலைய செய்கின்றன.
கொண்டபல்லி கோடேஸ்வரம்மா என்ற தனியொரு பெண் தன் அரசியல் பயணத்தின் தோழமையாக பல்வேறு பொதுவுடைமை இயக்கங்களையும், அதனைச் சார்ந்த இலக்கியத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். அவ்வாறே பாடல்களும் வீதி நாடகங்களும் பல பொதுத்தளங்களில் அவரால் அரங்கேற்றப்படுகின்றன. அவற்றோடு, தன் கனவுகள், அதிகாரத் துரத்துதல்களின் பின்னண்pயில் தலைமறைவு வாழ்வு, பல்வேறு தோழர்களின் நட்பு, காதல், திருமணவாழ்வு, குடும்ப உறவுகள், பொதுகூட்ட நிகழ்வுகள், பெண் இயக்கங்கள், மாதர் சங்கங்கள், பல்வேறு போராட்டங்கள், சிறை வாழ்வு, விடுதி வாழ்வு என தன் வாழ்நாள் நிகழ்வுகளையெல்லாம் இந்நூலில் மிகத்தெளிவாக விவரித்துள்ளார்.
பள்ளி செல்லும் வயதில் தனக்குக் குழந்தைத் திருமணம் நடந்ததுகூட தெரியாத பால்ய வயது நினைவுகளோடு தொடங்குகிறது கோடேஸ்வரம்மாவின் இந்நூல். நான்கு வயதோ, ஐந்து வயதோ இருக்கும்போது தாய்மாமன் வீராரெட்டிக்கு மணம் முடித்தார்களாம். திருமணமான இரண்டு வருடங்களுக்குள் டி.பி.நோயால் அவன் இறந்து விட்டானாம.;” இத்தகவலை பிற்பாடு பதின்ம வயதில் தன் பாட்டி சொல்லித் தனக்குத் தெரிய வந்ததாக எழுதியுள்ளார் கோடேஸ்வரம்மா. பள்ளிப் படிப்பை குடும்பத்தார் பாதியில் நிறுத்திவிட மகாத்மா காந்தியைப் பிடித்ததால் தேசிய இயக்கத்தில் ஆர்வம் காட்டுகிறார். பின்னர் பல தலைவர்களுடன் ஏற்பட்ட நட்பால், பாட்டு, நாடகம் என கலை நிகழ்வுகளின் வாயிலாக கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் வாழ்க்கையையும் மிக இளம் வயதிலேயே தன்னோடு இணைத்துக்கொள்கிறார். தெலுங்கானா போராட்டத்தில் தலைவர்களின் தலைமறைவு வாழ்க்கையில் உதவிக்காக சென்ற பெண்களின் அணிவகுப்பில் கோடேஸ்வரம்மாவும் ஒருவர். அப்போதுதான் 1939 இல் இடதுசாரித் தலைவரான கொண்டபல்லி சீதாராமையாவை மணம்புரிந்துகொள்கிறார். இதன் பயனாக மகள் கருணாவைப் பெற்றெடுக்கிறார். 1940 முதல் தீவிர அரசியல் கலைச் செயல்பாடுகளில் ஈடுபட்டு சுதந்திரப் போராட்டம், கம்யூனிஸ்டு கட்சி, நக்ஸலைட் போராட்டங்கள் ஆகிய இயக்கங்களின் வரலாற்றோடு தன்னை இணைத்துக் கொள்கிறார். பின்னர் தலைமறைவு வாழ்க்கையில் கருவுற்று 6 மாதம் ஆகியிருந்த நிலையில் கட்சித் தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க அவர் அனுமதியில்லாமலே கருக்கலைப்பும் நிகழ்ந்துவிடுகிறது. இச்சூழலில் தன்னோடு தங்கியிருந்து தன் இரத்தப்போக்குத் துணியை அலசிப்போட்டு உதவி செய்த ஆண் தோழருக்கு கோடேஸ்வரம்மா தன்நூலில் நன்றிசொல்லி இருப்பது தோழமையின் உண்மை வெளிப்பாடாகச் சொல்லலாம். சிறிது காலஇடைவெளியில் மகள் கருணாவோடு, மகன் சந்துவிற்கும் பின்னாளில் தாயாகிறார். மகள் கருணாவும், அவரது கணவர் ரமேசும் மருத்துவர்கள். டெல்லியில் மக்களுக்காக மருத்துவ சேவை செய்தவர்கள். தெலுங்கானா போராட்டம் தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தபின்னர் தன் எதார்த்த வாழ்க்கையில் பெரிதும் சிக்கித் தவிக்கிறார். அந்த வாழ்க்கையை மனத் தெளிவோடும், உறுதியோடும், அவர் எதிர் கொண்ட விதம் உண்மையில் ஒவ்வொருவரும் படித்துணர வேண்டிய வாழ்க்கைப்பாடம்.
மக்சிம் கார்க்கி-யின் தாய்நாவலில் வரும் அம்மாவை, அதைப் படித்த வாசகர்களால் கட்டாயம் மறக்கவே முடியாது என்பார்கள். அதுபோலவே ஆளற்ற பாலம்என்ற இந்நூலினை வாசிப்பவர் எவரும் கோடேஸ்வரம்மாவை நிச்சயம் மறக்கவே மாட்டார்கள். இவரது வரலாற்று நினைவுகளுக்கு தெலுங்கு மொழியின் மிகப் பிரபலமான எழுத்தாளர் ஓல்கா ஒரு அருமையான அணிந்துரையை வழங்கியிருக்கிறார். கட்சிகள் மற்றும் இயக்கங்களின் கண்ணோட்டத்தில் அரசியல்என்றால் ஆண்களின் துறை. அதில் பெண்கள் அடியெடுத்து வைத்தால் மனைவியர்களாகவோ, தாய்மார்களாகவோ, சகோதரிகளாகவோ மட்டுமே வருவார்கள். அவர்களுடைய பணிவிடைகளை ஏற்றுக்கொண்டு திரும்பவும் அவர்களை வெறும் அம்மாக்களாக மட்டுமே எஞ்சியிருக்கும்படிச் செய்துவிடுவார்கள். பெண்களின் அரசியல் உறவுகளை வரையறுத்துச் சொல்லுவது மிகவும் கடினம்என்ற ஓல்காவின் முன்னுரை வரிகள் அப்பட்டமான இந்திய அரசியலை அப்படியே பிரதிபலிக்கின்றன. மேலும், இந்நூலினை வாசிக்கும்பொழுது தாய்க்கும் சேய்க்குமான தொப்புள்கொடி பந்தத்தின் வலிமை என்னவென்று நிச்சயம் நமக்குப் புரியும். கம்யூனிஸ்டுகளின் மீது தொடர்ந்து அவதூறுகளையும், பழிகளையும் மட்டுமே பொழிந்து கொண்டிருக்கிற நவீன, அதிநவீன இலக்கிய சாம்ராட்டுகளுக்கு சிறிதேனும் மனச்சாட்சி இருக்குமெனில் அவர்கள் கோடேஸ்வரம்மாவின் சுயசரிதையை தன்வாழ்நாளில் ஒருமுறையாவது படித்துப் பார்க்கவேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் ஆந்திர மகாசபை என்ற ஒரு பரந்து விரிந்த மக்கள் மேடையை ஒன்றாக உருவாக்கியது கம்யூனிஸ்ட் கட்சி. இது நிலப்பிரபுக்களாலும், ஹைதராபாத் நிஜாமின் போலீஸ்களாலும் எல்லையற்ற துயரங்களுக்கு ஆளான உழவர்கள் பொங்கியெழுந்து 1946 முதல் 1951 ஆம் ஆண்டுகளுக்கிடையே நடத்திய ஒரு வீரஞ்செறிந்த போராட்டம் தெலுங்கானா பகுதி விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய எழுச்சிப்போராட்டமாகும். இதன் வழிகாட்டுதலில், 16 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவிற்குள் மூவாயிரம் கிராமங்களிலிருந்து விவசாய மக்கள், சுமார் 30 லட்சம் பேர், நலகொண்டா, கம்மம், வாரங்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் போராடும் கிராமப் பஞ்சாயத்துகளை உருவாக்குவதில் முதன்முதலில் மாபெரும் வெற்றியடைந்தார்கள். இதன் பயனாக பத்துலட்சம் ஏக்கர் நிலங்கள் மக்களுக்கே மறுவிநியோகம் செய்யப்பட்டன. மேலும், கட்டாய உழைப்பு (வெட்டி சேவை), அதீத வட்டி வசூல், நில அபகரிப்புக் கொடுமைகள் நிறுத்தப்பட்டன. ஆங்கிலேய அரசிற்கு ஆதரவாக இருந்த நிஜாம், இந்திய அரசில் இணைய மறுத்த நிலையில், அப்போதைய பண்டித ஜவஹர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு இராணுவத்தை அனுப்பியது. காங்கிரஸ் கட்சி, நிஜாமை எதிர்த்த போராட்டத்தில் ஆந்திர மகாசபையுடன் (அடிப்படையில் கம்யூனிஸ்டுகளுடன்) இணைந்து போராடிய போதிலும் மேற்கண்டவாறு கம்யூனிஸ்டுகளின் மக்கள் பஞ்சாயத்துக்கள் அமையத் தொடங்கியதும் விலகி நின்றார்கள். நிஜாம், இந்திய அரசுடன் சமரசம் செய்துகொண்ட நிலையில் அனைத்து ஆதிக்க சக்திகளும் ஒன்று சேர்ந்து கம்யூனிஸ்டுகளின் மீது தாக்குதல் தொடுத்தனர். கைத்தேர்ந்த பயிற்சியும், ஆயுத பலமுமிக்க இராணுவத் தாக்குதல்களுக்கு முன் ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியால் தாக்குப்பிடிக்க முடியாமல் போராட்டத்தை நிறுத்தியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. அப்போதைய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் இப்போராட்டத்தினை மறைமுகமாக தங்கியிருந்து பின்னர் படிப்படியாக வழிநடத்தத் தொடங்கினர்.
மேற்கண்ட இந்த வரலாறுதான் பின்னாளில் பிரபல கம்யூனிஸ்ட் கட்சி தலைவரும், கோடேஸ்வரம்மவின் கணவருமான கொண்டபல்லி சீதாராமய்யா ஆகியோரின் வாழ்க்கைக்குப் பின்னணியாக அமைந்ததுவிடுகிறது. சுந்தரய்யா, சி.ராஜேஸ்வரராவ், சந்திரசேகரராவ் ஆகிய மூன்று பெரும் கம்யூனிஸ்ட் தலைவர்களால் மகளாகவும், மருகமகனாகவும் பாதுகாக்கப்பட்டவர்கள் சீதாராமய்யாவும், கோடேஸ்வரம்மாவும். பாலிய விதவையான கோடேஸ்வரம்மாவை சீதாராமய்யா திருமணம் செய்துகொண்டதில் இருந்தும், அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளில் இருந்தும் தொடங்குகிறது இந்நூல். இயக்கம்தான் இவர்கள் இருவரையும் வாழ்க்கைத் துணையாக்குகிறது. சீதாராமய்யா ஆயுதப் போராட்ட நாட்களில் தெலுங்கானாவின் கிராமப்புறங்களில் தலைமறைவாக தங்கியிருந்து கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகையான பிரஜாசக்தியையும், பெண்கள் இதழான ஆந்திர வனிதாவையும் விற்பனை செய்கிறார். இவரது மனைவி கோடேஸ்வரம்மா கால்களில் சலங்கைகள் அணிந்து தாளமிட்டபடி வீரத்தியாகிகளின் வரலாறுகளை ஆந்திர நாட்டுப்புறக்கதையாக (புர்ரகதா) அம்மாநிலத்தின் பல மேடைகளில் நிகழ்த்திக்காட்டுகிறார். தலைமறைவாக இருக்கும் கட்சித் தொண்டர்களுக்கு உதவியாக இரகசிய மறைவிடங்களில் பணிசெய்கிறார். இல்லறவாழ்வில் கணவர் சீதாராமய்யாவின் போக்கில் ஏற்படும் மாற்றம் இவரைக் கவலைக்குள்ளாக்குகிறது. காரணமேதும் சொல்லாமல் அவரிடமிருந்து பிரிந்து செல்கிறார் கோடேஸ்வரம்மா. கணவரிடமிருந்து தனித்துச்சென்று இரண்டு குழந்தைகளுடன் தொடர்ந்து தன் வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் இன்னல்களை சந்திக்கும் இவருக்கு அவரது தாயும் தந்தையும் சற்று உதவுகிறார்கள். இந்நிலையில் சீதாராமய்யா புதிதாக ஒரு நக்சலைட் குழுவை உருவாக்கி மக்கள் யுத்தமாக அதனை செயல்படுத்தத் தொடங்கியதை கேள்விப்பட்டு கோடேஸ்வரம்மா மேலும் கவலைக்குள்ளாகிறார்.
இதுபோன்ற சூழ்நிலையில் சுந்தரய்யா உள்ளிட்ட தலைவர்கள் காட்டிய அக்கறையையும், அன்பையும் நினைவுகூர்ந்து நூல் நெடுக அகமகிழ்ந்து எழுதிச் செல்கிறார் கோடேஸ்வரம்மா. தனக்குப் பெரும் ஆதரவாக இருந்த தன் தாய் இறக்கும்போது அவரது சேமிப்பாக ஆயிரம் ரூபாயை செங்கொடி கட்சிக்குநன்கொடையாகத் தரும்படிக் கூறிவிட்டுக் கண்களை மூடுகிறார். தாய் அஞ்சம்மாவைத் தொடர்ந்து அவரது தந்தை, மகள் கருணா, மகன் சந்தூ, மருமகன் ரமேஷ் என அனைவரும் அடுத்தடுத்து சில கால இடைவெளியில் இறந்து போகிறார்கள். தாங்கஇயலா இத்தனை துயரங்கள் தொடர்ந்து துரத்தினாலும் கோடேஸ்வரம்மா விரக்தியடையவில்லை. பல வருடத் தலைமறைவு வாழ்க்கை, சீதாராமையாவின் பிரிவு, பிள்ளைகளின் இளவயது மரணம் இவற்றைத் தனியாக எதிர்கொண்டதோடு தனக்கான சிந்தனைகளை உருவாக்கிக்கொண்டு, பேரக்குழந்தைகளை ஆளாக்கிய இவர், ஆந்திர மஹிளா சபா, விகாஸ வித்யாவனம் ஆகிய அமைப்புகளோடு இணைந்துகொண்டு ஒரு விடுதிக் காப்பாளராக தொடர்ந்து தன்னால் இயன்ற பணிகளை செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். இத்தனை இடையூறுகளுக்கு மத்தியில் தம்மைப் போன்ற பல்வேறு தோழர்களின் கூட்டு முயற்சியால் கட்டியெழுப்பப்பட்ட மாபெரும் கட்சி பிளவுபட்டதை நினைத்து மிகவும் வருந்தி இந்நூலினை எழுதியுள்ளார் கோடேஸ்வரம்மா. இரண்டு கதைத் தொகுப்புகளையும், ஒரு கவிதைத் தொகுப்பையும் இதுவரை இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய சரிவும் குறித்து விருப்பு வெறுப்பற்ற ஆய்வு நூலை எழுத நினைப்பவர்கள் கட்சியின் அதிகாரப்பூர்வமான ஆவணங்களை மட்டும் அடிப்படையாக எடுத்துக்கொண்டால் அது முழுமையடையாது. தலைவர்களின் வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், நேர்காணல்கள், கொண்டபல்லி கோடேஸ்வரம்மா போன்றவரின் உண்மைச் சுயசரிதைகள் உள்ளிட்ட எண்ணற்ற பதிவுகளையும் சேர்த்துத்தான் ஆராயவேண்டும். சமகாலத்தில் சகமனிதர்கள் அனைவரும் விழிப்படையும் சூழலில் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா என்ற தனியொரு பெண் ஆளற்ற பாலம்என்ற தன்வரலாற்றை தனது 92 வது வயதில் இத்தனை நேர்த்தியாக எழுதியிருக்கிறார் என்றால் அவரது வாழ்க்கைச் சம்பவங்களில் இடம்பெற்ற சுகதுக்கங்களை தனியொரு பெண்ணுக்கு நேர்ந்த அனுபவம் என்று மட்டும் எடுத்துக்கொள்ளாமல், இலட்சிய நோக்கோடு அரசியல் இயக்கங்களில் கைகோர்த்து அல்லல்படும் அனைத்து பெண்களின் சார்பான ஒருவரின் போராட்டம் என எடுத்துக்கொள்ளலாம். இதனைடிப்படையில், பெண் தன்னிலைகளின் அகப்புற பரிமாணங்களை அறிவதற்கு அவசியமாக இந்நூல் அனைவராலும் வாசிக்கப்பட வேண்டியதும், விவாதிக்கப்பட வேண்டியதும், இலக்கியங்களுக்கிடையே பாதுகாக்கப்பட வேண்டியதும் ஆகும்.
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் ஆந்திர மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் வீராங்கனையாக வலம் வந்து, தற்போது 92 வயதைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா மனதிற்குள் தன் வாழ்வனைத்தையும் போட்டு மக்கவைத்து செத்துப் போவதே மேன்மை என்று நினைக்கும் பெண்களுக்கிடையில் எத்தடைகளையும் உடைத்துவிட்டு தன் வரலாற்றை ஆளற்ற பாலம்என்ற தலைப்பில் எழுதியிருப்பது உண்மையில் அனைவரும் மதிக்கத்தகுந்த ஒரு படைப்பாகும்.கலையுள்ளமும், கவிதை மனமும் கொண்ட ஓரு நாடக நடிகை, பாடகி, எழுத்தாளர், களப்பணியாளர், நாட்டுப்புறக் கலைஞர், பரிவும் பாசமும் மிக்க இரண்டு குழந்தைகளின் தாய், கட்டுப்பாடு மிக்க கட்சி ஊழியர், மனிதநேயமிக்க மன்னிக்கவும் தெரிந்த ஒரு மனுஷிஎன வார்த்தைகளால் அளவிட முடியாவிட்டாலும் வாழ்ந்து வருகிற மனித சமுதாயத்தின் ஒரு மகத்தான மனிதருக்கு எத்தனை பாராட்டுக்களையும் நன்றியையும் சொன்னாலும் ஈடாகாது என்பதை மட்டும் இந்நூலின் வழி உறுதியாகச் சொல்லலாம். எனவேதான், ஆந்திர மாநிலத்தில் கடந்த எழுபது ஆண்டுகளாக இயங்கி வரும் இடதுசாரி இயக்கத்தின் வரலாறாகவும், தொண்ணூறு வயது தாண்டிய ஒரு புரட்சியாளரின் சுயசரிதையாகவும், ஒரு போராளிப் பெண்ணின் துயரக் கதையாகவும் எழுத்தாளர் அசோகமித்திரன் இவரது படைப்பை விமர்சனம் செய்துள்ளார். 
தன் வாழ்நாள் முழுவதும் வெறும் துக்கச் சுமைகளுடன் தலைமறைவாக ஊர்ஊராக அலைந்து திரிந்து தனது சொந்த உழைப்பின் மூலமே இறுதி காலங்ளையும் கடக்கும் மனத்திடமிக்க ஒரு பெண் கோடேஸ்வரம்மா. காரணம் கூடக் கூறாமல் பிரிந்துபோய்விட்ட கணவர், ‘புரட்சித் தலைவனாக சர்வதேசப் புகழ் பெற்றிருந்த சீதாராமய்யா முப்பத்தாறு வருடங்கள் கழித்து, நோய்வாய்ப்பட்டு, முதுமையில் இயலாமையுடன் வீடு திரும்புகிறார். ஒரே வீட்டில் மாடியிலிருக்கும் அவருக்கு, கோடேஸ்வரம்மாவைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது. உறவினர்களும், தோழர்களும் அவரைப் பார்க்கும்படி கோடேஸ்வரம்மாவிடம் வேண்டுகிறார்கள். மகன் சந்தூவும் கூட தன் மரணத்திற்கு முன்பொரு சமயம் கணவன் என்று பார்க்க வேண்டாம் அம்மா. ஒரு சக தோழர் என்ற முறையில் பார்க்கலாமேஎன தந்தைக்காகப் தாயிடம் பரிந்துரைக்கிறான். ஆனால், கோடேஸ்வரம்மா மென்மையான வைராக்கிய வார்த்தைகளால் எனக்கு அவரைப் பார்க்க வேண்டும் போல் இருக்கவேண்டாமாஎன பதிலளிக்கிறார். பின்பு, மரணப்படுக்கையிலிருந்த சீதாராமய்யாவைப் போய்ப் பார்த்து அவர் இறக்கும் முன்பு சில நாட்கள் மனைவியாக அல்லாமல், ஒரு நல்ல தோழராக. அவருக்கான பணிவிடைகளை மட்டும் செய்கிறார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் பிரிந்து போய்விட்டதே என்கிற கவலை ஒரு பக்கம் மனதை வருத்தினாலும், கட்சிகள் பிரிந்ததாலேயே சகநண்பரின் (சீதாராமாய்யாவின் மரணம்) சுக துக்கங்களில்கூட தோழர்கள் பங்கேற்க மறுக்கிறார்களே என்கிற ஆதங்கத்தை மனதில் பட்டவாறு எழுதியதோடு, இதெல்லாம் சரிதானா என்ற கேள்வியையும் தனதுநூலில் எழுப்பியுள்ளார். மேலும், கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் பற்றிய கவலையோடு சொந்த வாழ்க்கையில் கணவர் தன்னைவிட்டுப் பிரிந்து வாழ்ந்ததால் ஏற்பட்ட மனக்காயம்;, பலஆண்டு தலைமறைவு வாழ்க்கையில் பிள்ளைகள் பிரிக்கப்பட்டதால் ஏற்பட்ட வருத்தம்;, மருமகன் மரணத்தால் மனமுடைந்து மகளும் (கருணா) தற்கொலை செய்து கொண்டதால் ஏற்பட்ட கவலை, மகன் தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்து காவலர்கள் பிடியில் சிக்கி அடையாளம் தெரியாமல் அழிக்கப்பட்ட துயரம் என அடுக்கடுக்கான தாக்குதல்களால் கோடேஸ்வரம்மாவின் வாழ்க்கை சுக்கு நூறாகிப் போகிறது. எனவேதான், “உடைசலிலிருந்து பொறுக்கி அடுக்கிய நினைவுகள்தான் இவைஎன நூலின் முகப்பில் எழுதியுள்ள கவிதையின் இறுதி வரிகள் உயிரோட்டமான அவரின் உண்மை வாழ்வை பறைசாற்றுவனவாக அமைந்துள்ளன. கணவரைப் பிரிந்து 36 ஆண்டுகள் கழித்து மரணப் படுக்கையில்கூட பார்க்க விரும்பாத இறுகிய இதயத்துக்காரர் போல் தோன்றினாலும், பார்த்த சமயத்தில் வெளிப்படுத்திய உணர்வு மரணத்துக்குப்பின் மனதின் அழுகை எல்லாமும் அவர் ஒரு கம்யூனிஸ்ட்; மற்றும்  சிறந்த மனிதர் என்பதற்கான பதிவுகளாக வாசிப்பினூடே உணரமுடிகிறது. கோடேஸ்வரம்மா தனது நூலின் இறுதியில் 9 கட்டுரைகளையும், முக்கியமான சில கவிதைகளையும் இணைத்ததோடல்லாமல், தனது வாழ்வின் அதிமுக்கியமான தோழர்கள் சுந்தரய்யா, சி.ராஜேஸ்வரராவ், முத்துகூரி சந்திரசேகரராவ், சங்கர சத்திய நாராயணா போன்ற மதிப்புமிக்க தலைவர்களையும் நினைவு கூர்ந்து எழுதியிருக்கிறார். இது தவிர இவரது சிறை அனுபவங்களும். கலைஇலக்கியப் பார்வையும், பெண் இயக்கங்கள் பற்றிய பதிவுகளும் அக்கால வரலாற்றை அறிவதற்கு உறுதுணை புரிகின்றன. மேலும், கம்யூனிச குணாம்சங்களில் ஏற்படும் மாற்றத்தை சுய விமர்சனம் செய்து கொள்ளவும், எதிர்கால கம்யூனிஸ்ட் வாழ்க்கை நிலை தடுமாறாமல் எப்படி நீடிக்க வேண்டும் என்பதனை அடையாளப்படுத்தவும் கொண்டபல்லி கோடேஸ்வரம்மாவின் தன் வரலாற்று நூல் வருங்கால தலைமுறையினருக்கு கட்டாயம் பயன்படும்.
                “எழுத்து அழியாதது, ரசனை மிகுந்தது, என்றென்றும் நிலைத்திருக்கக் கூடியதுஎன்ற கோடேஸ்வரம்மாவின் வரிகள் அத்தனையும் உண்மை! ஏனெனில், தன்னோடு பிறந்தவர்களை இழந்து, தன்னைப் பெற்றவர்களை இழந்து, தான் பெற்றவர்களையும் இழந்து, தன் பிறந்த வீட்டு, புகுந்த வீட்டு உறவுகள் அனைவரையும் இழந்து, அரசியல் ஆளுமைகளாக தன்னோடு சேர்ந்து நடந்த அனைவரையும் இழந்து, பால்ய வயதிலிருந்து தன்னோடு நடைபயின்ற சக தோழர்கள் அனைவரையும் இழந்து, இருகரைகளிலும் ஆளற்ற பாலமாக நின்றாலும், வருங்காலத் தலைமுறையினருக்கு தன் எழுத்தின் வலிமையால் என்றென்றும் உண்மை ஒளி வீசும் முன்மாதிரியாக நிலைத்திருக்கப் போகிறார் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா. எளிய, அர்த்தம் தரத்தக்க வார்த்தைப் பிரயோகங்களால் உருவான இந்நூலினை உண்மையான கம்யூனிஸ்டுகள் படிக்கிறார்களோ இல்லையோ, கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் கட்டாயம் படிக்கவேண்டிய ஒரு சுயசரிதை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்லமுடியும்.


கமலாதாஸ் - என் கதை (இந்திய கிளாசிக் தன்வரலாறு)
                இந்நூலின் ஆசிரியர் மலையாளத்தில் புனைகதை எழுத்தாளர் மாதவிக்குட்டியாகவும் ஆங்கிலத்தில் கவிஞர் கமலா தாஸாகவும் அறியப்பட்டவர். இவர் கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள புன்னயூர்க் குளத்தில் 1934, மார்ச் 31 அன்று பிறந்தவர். மலையாள மொழியின் முக்கிய பெண்கவிஞரான பாலாமணியம்மா, ‘மாத்ருபூமிநாளிதழின் இயக்குநர் வி.எம்.நாயர் ஆகியோரின் மகளாவார். கவிஞர், எழுத்தாளர், பத்தியாளர் என்ற வகையில் உலகப் புகழ்பெற்றவர். நாவல், சிறுகதை, சுயசரிதை போன்ற இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். கமலா தாஸின் சிறுகதைகளை ஆதாரமாகக் கொண்டு சில திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. ஆசிய கவிதைப் பரிசு, கென்ட் விருது, ஆசான் கவிதை விருது, கேரள சாகித்திய அக்காதெமி மற்றும் மத்திய சாகித்திய அக்காதெமி விருதுகள், வயலார் விருது, எழுத்தச்சன் விருது ஆகியவற்றைப் பெற்றவர். புகழ்பெற்ற இந்து நிலவுடைமைக் குடும்பமான நாலாப்பாட்டு தறவாட்டில் பிறந்த கமலா தாஸ், தன் வாழ்வின் இறுதி நாட்களை புனேயில் கழித்தார். 2009, மே 31 -  இல் காலமாவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாம் மதத்தை தழுவினார். என் கதை, நீர்மாதளம் பூத்த காலம், ஒற்றயடிப் பாதை, மாதவிக்குட்டியின் கதைகள், கமலா தாஸின் தேர்ந்தெடுத்த கவிதைகள் போன்றவை இவரது முக்கியமான படைப்புகளாகும். என் கதைஎன்பது கமலா தாஸின் சுயசரிதை நூலாகும். இதனை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியவர் நிர்மால்யா.
இந்தியாவின் பெண் இலக்கிய ஆளுமைகளில் கமலா தாஸ் என்பவர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். மலையாள நாடுவார இதழில் தன்னுடைய சுயசரிதையை என்டெ கத’ (என் கதை) என்ற பெயரில் தொடராக இவர் எழுதியதை, பிறகு மலையாளத்தில் என்டெ கதஎன்ற பெயரில் நூலாக வெளியிட்டுள்ளார். மை ஸ்டோரி’ (ஆல ளுவழசல) என ஆங்கிலத்தில் தி கரண்ட்வார இதழில் தொடராக எழுதி அதனையே 1977-ம் ஆண்டு ஆங்கில நூலாகவும் வெளியிட்டுள்ளார். கமலா தாஸ் தன் சுயசரிதையை எழுதத் தொடங்கியதிலிருந்தே பல தரப்பு மக்களிடத்திலும் அது சர்ச்சைகளை உருவாக்கியிருக்கிறது. அவர் தன்னுடைய வாழ்க்கையை நேர்மையாகவும், அப்பட்டமாகவும் பதிவுசெய்ததும்தான் இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணம். மலையாளப் பதிப்பைவிட ஆங்கிலத்தில் வெளியான நூல்களே மிகுதியான கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளன. ஆங்கிலம் பேசினாலும் மலையாளத்தில் பேசினாலும் மரபான இந்திய மனம் ஒரே மாதிரித்தான் இருந்தது” (பக்கம்.17) என்ற கமலா தாஸின் இந்த வாசகங்கள் பல உண்மைகளை உணர்த்துகின்றன. ஆனால், இந்தச் சுயசரிதை மொழி நடைக்காகவும் உண்மைத்தன்மைக்காகவும் அதிகமாகப் பாராட்டப்பட்டது என்பதும் முரணான ஓர் உண்மையே.
அவரது வாழ்வனுபவங்கள் என் கதைஎன்ற தலைப்பில் நூலாக வெளியானபோது பதினொரு மாதங்களிலேயே ஆறு மறு பதிப்புகளைக் கண்டுள்ளது. முப்பத்தாறாயிரத்திற்கும் (36000) மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகித் தீர்ந்தன. தன் வாழ்க்கையில் தனது இந்த சுயசரிதையை எழுதும்போது தான் அடைந்த மகிழ்ச்சியை வேறு எந்த நூலும் தந்ததில்லை என்கிறார் கமலாதாஸ். கமலாதாஸின் எழுத்துக்களைப்பற்றி அதீத பாராட்டுக்களும், கடுமையான கண்டனங்களுமாக பல்வேறுபட்ட விமர்சனங்களும் இந்திய மற்றும் உலகளவிலான வாசகர்களால் முன்வைக்கப்பட்டன. இந்துவாகப் பிறந்து தன் வாழ்வின் பெரும்பகுதி காலங்களைக் கடந்த கமலா தாஸ், கமலா சுரய்யா என்னும் இஸ்லாமியராக தனது இறுதி காலங்களை மாற்றியமைத்துக் கொண்டதன் காரணம்தான் என்ன என்ற கேள்வியும், வாழ்வியல் அழகின் உச்சத்தை தொட்ட பல பிரபலங்களும் இறுதியில் இஸ்லாமிய மதத்தைத் தழுவுவதற்கான காரணமும் ஆராயப்பட வேண்டிய ஒன்றாகவே கருதப்படுகிறது. எவ்வாராயினும், ஓர் பதின்ம வயதுப் பெண்ணாக, திருமண வயதுடைய மங்கையாக, மனித வாழ்வியலைப் புரிந்தவளாக, முதுமையின் அழகில் அமர்ந்தவளாக ஒரு முழுப் பெண்ணின் வாழ்க்கையை இல்லறத்தோடும், இலக்கியத்தோடும் வாழ்ந்து முடித்திருக்கிறார் என்பது மட்டும் கமலாதாஸ் என்னும் பெண் எழுத்தாளரைப் பொறுத்தவரை நிதர்சனமான உண்மை.
தந்தைவழி சமூக அமைப்பிற்குள் பெண் என்பவள் மூச்சுவிடமுடியாமல் திணறும் அவஸ்தையைப் பற்றி கமலாதாஸ் காரசாரமான வாதங்களை தமது நூலில் முன்வைத்துப் பேசுகிறார். அவரது தந்தை, அவரது கணவர், அவரது நாலப்பாட்டுக் குடும்பத்தின் ஆண்மக்கள் அனைவருமே கொண்டிருந்த ஆணாதிக்கக் கொடுமையை கமலாதாஸ் தனது நூலில் ஒளிவு மறைவின்றி எழுதியதோடு, அமைதியும் நிம்மதியும் இழந்த நிலையில், கொந்தளிக்கும் கடலின் நடுவில் சுழல்வது போல, தன் நெஞ்சத்துக் குமுறல்களை அவர் மிக நேரிடையாக எழுதிச் செல்கிறார்.
எனவே, கமலாதாஸின் என் கதைஎன்னும் சுயசரிதை இந்தியப் பெண்களின் சரித்திரத்தில் என்றும் பேசப்படும் நூலாக இருக்கும் என்பது தவிர்க்கமுடியாத உண்மை. கமலா தாஸின் என் கதையைத் தவிர்த்து, ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை அதன் சோகத் தனிமையுடனும் உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் கொந்தளிக்கும் கவிதையுடனும் இந்த அளவு உண்மையுணர்வுடன் முழுமையாக வெளிப்படுத்திய ஒரு இந்திய சுயசரிதையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை என்பார் மலையாளக் கவிஞர் சச்சிதானந்தம்’. இவரது கூற்று, வாழ்வின் எதார்த்தங்களை புரிந்து கொண்டவர்களாலும், ஏற்றுக்கொண்டவர்களாலும் மட்டுமே விரும்பத்தக்கதாக இருக்கும். மற்றவர்களின் கவனத்திற்கு இது அறிவார்ந்த செயலாகத் தோன்றாது.
ஏனெனில், இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் ஏமாற்றத்தைத் தரும் ஆண் வர்க்கத்திடம் தான் மீண்டும் மீண்டும் நம்பிக்கையோடு காதல் வயப்படுவதும், அதனை எழுத்தினூடே நியாயப்படுத்த முயல்வதும்தான் மிகுதியாக பேசப்பட்டுள்ளது. இச்செயல்கள் மனித சமுதாயத்தின் ஒழுங்கினத்தை வேரறுப்பது போலவும், அடுத்த சந்ததியினரை தவறான பாதைக்கு இட்டுச்செல்வதாகவும் தோன்றுகிறது. என்னை நேசிக்கத் தெரிந்த ஒரு ஆண் மகனைக்கூட நான் இன்றுவரை கண்டதில்லை. என் கணவர் உடலுறவு கொள்ளும் போது, உடலுறவின் முடிவில் அவர் தனது கைவளையத்திற்குள் என்னைப் பாதுகாக்க வேண்டுமென்று விரும்பினேன். அவர் எனது முகத்தை வருடவோ எனது வயிற்றில் கைவைக்கவோ செய்திருந்தால் ஒவ்வொரு உடலுறவுக்குப் பின்பும் நான் அனுபவிக்க நேர்ந்த மிதமிஞ்சிய அசட்டு உணர்வு மேலும் அதிகரித்திருக்காது. ஒரு பெண் தனது முதல் கணவரை உதறிவிட்டு வோறோர் ஆணின் படுக்கைக்குச் செல்லும்போது அது முட்டாள்தனமாகவோ ஒழுங்கீனமாகவோ ஆகிவிடாது. அது குரூரமானது. அவள் அவமானப்படுத்தப்பட்டவள், காயப்பட்டவள், அவளுக்கு ஆறுதல் அவசியம். ஒருபோதும் என் கணவரின் முன்பு எனக்குக் காமவேட்கை எழுந்ததில்லை. அவரெதிரில் என் காமவேட்கை எங்கோ போய் ஒளிந்து கொள்கிறது. அறிவாற்றல் மிகுந்த எனது காதலர் என்னிடம் எப்போதும் பித்துப்பிடித்த பாலியல் மோகத்தை எழுப்புகிறார். அவர் என்னைத் திருப்திப்படுத்தியபோதிலும் அவர் திருப்தியடைவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். ஒருமுறை உடலுறவுக்குப் பிறகு நான் அரைத்தூக்கத்தில் இருந்தபோது என் கன்னங்களை அழுத்திக்கொண்டிருந்த அவரது உள்ளங்கை சட்டென்று மென்மையடைவதாக எனக்குத் தோன்றியது. அவர் ரகசியமாக மெல்ல எனது பெயரை உச்சரிப்பதைக் கேட்டேன். நான் விழித்திருந்தால் அவர் அத்தனை கருணை உள்ளவராக இருந்திருக்கமாட்டார். அதுதான் எனது வாழ்க்கையின் உன்னத நிமிடம் என்கிறார் கமலாதாஸ். (என் கதை.பக்கம்.25-26)
மேலும், “நான் பூப்பெய்தியபோது, கருத்தரித்துக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான வளர்ச்சியை எய்திவிட்டதாக தனது தாய் கூறிய நாளிலிருந்து, நான் கண்ட வீரம்செறிந்த ஒவ்வொர் ஆணையும் எனது குழந்தைகளின் வலுவான தந்தையாகவே பார்த்தேன். மகாபாரதத்தின் குந்திமீது எனக்குப் பொறாமை ஏற்பட்டது. அவளைப் போட்டிபோட்டுத் தோற்கடிக்க ஆசைப்பட்டு வீட்டில் தனித்திருக்கும் வேளைகளில் பலதடவை சூரியவெளிச்சத்தில் நிர்வாணமாக நின்றேன். இருப்பினும் கன்னிப்பெண்ணாகவே எஞ்சினேன்.” (என் கதை.பக்கம்.78-78) என்ற இவரது இளம்வயது எண்ணம் வெறுமெனே கற்பனை நிலையில்லாமல் அவ்வாறே வாழ்ந்தும் மறைந்துள்ளார். குடும்ப கட்டுக்கும் அப்பாற்பட்டு தான் காதற் வயப்பட்ட ஆண்கள் ஒரு சிலரின் பெயர்களைக் கூறாமல் தனது நூலில் விவரித்துள்ளார். உதாரணமாக, தனக்கு சமஸ்கிருதம் தெரியாமல் இருந்தநிலையில் அதனைக் கற்றுக் கொடுத்தவர் மீது ஈர்ப்பு வந்தது என்கிறார். மேலும், தனக்கு எப்பொழுதும் உயரமான ஆண்களையே பிடிக்குமென்றும் ஒரு முறை தான் கலந்து கொண்ட மதுபான விருந்தில் குள்ளமாக ஒருவர் வந்து தன்னைத் தானே அறிமுகம் செய்து கொண்டு பேச்சின் இடையில் சொன்ன சரமாரியான கவிதைகளால் அவர் மீது காதல் கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். இவரைப் போன்றே பெரும்பான்மையான பெண்களின் அகவுணர்வு இவ்வாறு அமைந்திருந்தாலும், மரபார்ந்த இந்தியச் சமூகத்தினூடே நேரிடையாக அதனை வெளிப்படுத்திக் கொள்வதனை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கும் சமூகக் கட்டமைப்பில்தான் இந்தியப் பெண் வர்க்கத்தின் தன்னிலைகளும் உள்ளர்ந்த செயற்பாட்டம்களும் விரவிக்கிடக்கின்றன.
இருபத்தேழு அத்தியாயங்களில் எழுதப்பட்டிருக்கும் கமலா தாஸின் இந்தச் சுயசரிதை நூல், ஒரு பெண்ணின் இருப்பை எந்நிலையிலும் ஒழுக்கநெறிக்குள் அடக்கிவைக்க முடியாது என்பதனை தௌ;ளத்தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது. அவரின் மொழிநடையில் சொல்ல வேண்டுமானால், “சமுதாயம் என்கிற திருட்டுக்கிழவி உருவாக்கிய கசாப்புக்கூடமே ஒழுக்க நெறி. உண்மையைக் கண்டு அஞ்சுபவர்களையும் பொய் பேசுபவர்களையும் ஏமாற்றுபவர்களையும் கருக்கலைப்பு செய்பவர்களையும் நீலிக் கண்ணீர் வடிப்பவர்களையும் கிழவி இரவு வேளையில் தனது கம்பிளியால் பாதுகாக்கிறாள். மனத்தின் சைதன்யத்தைத் தெரிந்து வைத்திருப்பவர்களும் உடலின் அழிவையும் அற்பத்தனத்தையும் புரிந்து வைத்திருக்கும் சத்தியவான்களும் கம்பிளியின் பாதுகாப்புக்கு வெளியில் குளிரில் நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சியைக் கண்ட சமுதாயக் கிழவி வாய்விட்டுச்சிரிக்கிறாள் என்பார்.
இந்தச் சுயசரிதையில் கமலா தாஸ், பெண்ணின் மீது கலாச்சாரம், மரபு, ஒழுக்கநெறி என்ற பெயரில் இந்தச் சமூகம் சுமத்தியிருக்கும் பல கட்டுப்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். பெண்ணின் இருப்பை மட்டுமே பதிவுசெய்து வந்த இந்திய இலக்கிய உலகில் முதன்முறையாகப் பெண்ணின் அக வாழ்க்கைக் கனவுகளையும், அவற்றினூடே இருக்கின்ற தீராத வேட்கைகளையும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். ஒரு பெண்ணின் தனிமை என்பது திருமணம், காதல், காமம் போன்ற பல்வேறு பரிமாணங்களை கடந்துநிற்பது எனவும் சுட்டிக்காட்டுகிறார். கேரளாவில் நாலப்பாட்டு தறவாட்டில் பிறந்த கமலா தாஸின் திருமணம், பதினைந்து வயதில் அவரைவிடப் பல வருடம் மூத்தவரான மாதவ தாஸ{டன் நடக்கிறது. இவ்வாறான பொருத்தமில்லாத திருமணத்தில் காதலையும், பரிபூரணமான அன்பையும் தேடித் தேடிக் களைத்துப்போவதாக தன் சுய விமர்சனத்தில் சுட்டிக்காட்டுகிறார். மேலும், அவர் தன்னுடைய முதலிரவைத் தோல்வியுற்ற வன்புணர்ச்சியென்றே தனது நூலில் பதிவு செய்துள்ளார். ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தில் திருமணம், காதல், காமம், நம்பிக்கை, துரோகம், தனிமை, மனநிறைவு, ஆன்மிக தேடல் போன்றவற்றின் நேர்மையான பதிவாக இந்த சுயசரிதையைச் சொல்லலாம். கமலா தாஸின் பரிபூரண அன்புக்கான தேடல் நிறைவேறாத தேடலாகவே முடிவில்லாமல் கடைசிவரை இந்நூலில் தொடர்கிறது.
ஒரு பெண்ணாக எழுத்தாளராக ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்துள்ளதாகவும் தனது இறுதி நாட்களை தன்னை எப்படி அடக்கம் செய்யவேண்டும் என எழுதி வைத்திருப்பதாகவும் கிருஷ்ணனைப் பற்றிக் கவிதை எழுதிக் கொண்டே இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்ட கமலா தாஸ் என்ற கமலா சுரய்யா போலி சமூக கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து பெண்ணியம் பற்றிய ஆண் வர்க்கத்துப் பார்வையை புரட்டிப் போட்டு தனது வாழ்வியலை நிறைவு செய்துள்ளார்.
தமிழினி ஒரு கூர்வாளின் நிழலில் (புலிகளின் மகளிரணித் தலைவியின் தன்வரலாறு)
இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் தாய் சின்னம்மா தந்தை சுப்பிரமணியம் தம்பதிகளுக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்). 1991 இல் இந்துமகா வித்தியாலயத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது தமீழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து போராளியானார். இளம் வயதிலேயே பல போர்க்களங்களில் சமராடிய அனுபவங்களோடு, பின்னாளில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராகச் செயல்பட்டவர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், அன்ரன் பாலசிங்கம், அடேல் பாலசிங்கம் உட்படப் புலிகள் இயக்கத்தின் உயர்மட்டத் தலைவர்களிடத்திலும், மக்களிடத்திலும் அபிமானம்பெற்ற தலைவராக விளங்கியவர். அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற பல்வேறு உயர்மட்;டச் சந்திப்புகளிலும் இயக்க அரசியல் நிகழ்வுகளிலும் பங்கேற்றவர். சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தலைவர்களிடமும் பிரதிநிதிகளிடமும் நன்கு பரிச்சயமானவர். புலிகளின் வீழ்ச்சியை அடுத்துப் பல்லாயிரக்கணக்கான போராளிகளுடன் இலங்கை அரசின் சிறைச்சாலைகளிலும் புனர்வாழ்வு முகாமிலும் நான்காண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு 2013 இல் விடுவிக்கப்பட்டதும் திருமணம் செய்து பொதுவாழ்வில் ஈடுபட்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழினி 2015 இல் மரணமடைவதற்கு சிலமாதங்களுக்கு முன்பு ஆயிரக்கணக்கான போராளிகளின் தீரம் மிகுந்த உயிர் அர்ப்பணிப்புகளின் மூலமும், இலட்சோபலட்சம் மக்களது பேராதரவுடன் கட்டியெழுப்பப்பட்ட ஒரு போராட்ட இயக்கம் ஏன் தோற்கடிக்கப்பட்டது என்பதற்கான உண்மையான காரணங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதற்காகவும், புலிகளின் வீழ்ச்சியிலிருந்து தான் கற்றுக்கொண்ட போராட்ட அனுபவங்களையும் புதிய சிந்தனைகளையும் தன் சாட்சியாக ;ஒரு கூர்வாளின் நிழலில்என்னும் தலைப்பில் ஒரு நூலாக படைத்தளித்துள்ளார் தமிழினி. இவற்றினூடே தன் இயக்க அனுபவங்களையும் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார். விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியமான தலைவர்கள் வேறு எவரும் தம் இயக்கத்தைப் பற்றி இவ்வளவு நேர்த்தியாக சுயவிமர்சனம் செய்யாதிருக்கும் நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த பெண் போராளியொருவரின் முதல் சுயசரிதை என்பதாலும் தமிழினியின் இந்நூல் வாசிப்பின் வழி முக்கியத்துவம் பெறுகின்றது. சிலர் எழுதியிருப்பினும், அவையெல்லாம் இயக்கத்தின் வீரவரலாற்றையும், வெற்றியையும்  முன்னிலைப்படுத்தும் பிரச்சாரப் படைப்புகளாகவே அமைந்துள்ளது.
தமிழினியின் ஒரு கூர்வாளின் நிழலில்என்னும் சுயசரிதை நூல் பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பினாலும், தமிழிலக்கிய உலகில் முக்கியமானதொரு நூலாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் தமிழினியின் இயக்கம் பற்றிய விமர்சனங்கள் காரசாரமாக இல்லாதிருப்பதுபோல் தோன்றினாலும், சற்று ஆழ்ந்து நோக்கினால் மிகவும் கடுமையான விமர்சனங்கள் பொதிந்திருப்பதும் தெரியவரும். விடுதலைப்புலிகளின் தலைவரைத் தனிப்பட்டரீதியில் விமர்சிக்கவில்லையெனினும், தமிழினி அவர்கள் கோட்பாட்டு ரீதியில் விடுதலைப்புலிகளின் அமைப்பையும், அவை பின்பற்றிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டும் விமர்சித்திருக்கின்றார். அந்த அமைப்பில் போராடி, இறுதியில் நிராதரவாகக் கைவிடப்பட்டு, இராணுவத்திடம் சரணடைந்து, சிறைவாழ்க்கை, தடுப்புமுகாம் வாழ்க்கை, புனர்வாழ்வு எனப் பல்வேறு பரிமாணங்களில் சென்று மீண்டும் சமூகத்திற்குள் நுழைந்த இவரைச் சமூகம் எதிர்கொண்ட விதம் அதிர்ச்சியூட்டுகின்றது. இந்நிலையில் அவரது வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் தமிழினி என்னும் பெண் போராளியொருவர் மனம் திறந்த நிலையில் தன் வாழ்வில் நடந்தவற்றை ஆராய்ந்து முடிவுக்கு வருவதற்கும் தன் சிந்தையில் நினைத்தவாறு கூறுவதற்கும் முழு உரிமையுள்ளது. அவரது கருத்துகளை வாசிப்பு வெளியில் வீற்றிருப்பவர்கள் ஏற்கலாம் அல்லது ஏற்காமலும் இருக்கலாம்.
தமிழினி தன் சுயசரிதையில் தான் ஏன் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமையின் கீழ் ஆயுதம் தாங்கிப்போராடப்புறப்பட்டேன் என்பதிலிருந்து, 2009இல் முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்ததையும், அதன் பின்னரான தடுப்புமுகாம் மற்றும் புனர்வாழ்வு முகாம் போன்ற அனுபவங்களையும், சிறை வாழ்வின் பின்னர் தன் கடந்த கால வாழ்க்கையினை மீளாய்வு செய்தது வரை தன்னி;லைகளை பல பரிமாணங்களில் தமிழினி விவரித்திருக்கின்றார். இந்நூலில் தமிழினி தன் குடும்பம், பள்ளி வாழ்க்கை, தான் பிறந்த நகரம் எவ்வாறு போர்க்களமாக மாறுகின்றது, தான் இணைந்த இயக்க வாழ்க்கையின் புரிதல், இயக்கத்திலிருந்த அரசியல் மற்றும் ஆயுதப்போராளிகளின் நிலைகள், விடுதலைப்புலிகளின் வெற்றிகரமான போர்களில் ஈடுபட்ட தனது வாழ்வனுபங்கள், யுத்தத்தின் இறுதிக்கால இயக்கத்தின் நிலை, மக்களின் நிலை எனப் பல்வேறு விதமான அனுபவங்களினூடே யுத்தத்தின் பின்னரான தன் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தையும் பெருமளவு இந்நூலில் விவரித்திருக்கின்றார். மிகுதியான பக்கங்களை உடைய பெரிய அளவிலான நூல் என்றில்லாவிட்டாலும், அத்தியாயம் ஒவ்வொன்றுமே விரிவான தகவல்களை உள்ளடக்கிதாக அமைந்துள்ளது. அந்த வகையில் கட்டுக்கோப்பானதொரு சுயசரிதையாக இயற்றப்பட்டிருக்கும் இந்நூல், உலகளாவிய பெண் சுயசரிதைப் படைப்புகளினூடே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதோடு, தமிழினியின் எழுத்தாற்றல் இலக்கியச்சிறப்புமிக்கதொரு இடத்தில் அவரை இந்நூலின் வழியாக நிலைநிறுத்தியுள்ளது.
தமிழினி தன் அறிவுக்கும், ஆளுமைக்கும் உட்பட்டு தான் அறிந்த தகவல்கள் மற்றும் தரவுகளை அடிப்படையாக வைத்து சிறந்ததொரு அத்தியாயங்களில் தான் இயற்றிய நூலினை ஒரு கூர்வாளின் நிழலில்என்னும் தலைப்பில் ஒரு போராளியாக நேர்மையாகப் பதிவு செய்திருக்கின்றார். தான் சார்ந்த செயற்பாடுகளில் ஏற்பட்ட தவறுகளைக்கூட தலைமையின் தலையில் ஏற்றித்தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒருபோதும் அவர் நினைத்ததில்லை. ஏனெனில், “போராட்டத்தை முழுவதுமாக தன்னகப்படுத்திக்கொண்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாகப் போருக்குள்ளே வாழ்ந்திருக்கிறேன். போராளிகளான நாங்கள் எமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றத்தவறி விட்டோம். கையிலெடுத்த ஆயுதங்களைக் பாதுகாத்துக்கொள்வதற்காக எமது அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்து விட்டோம்." (பக்கம் 7) எனக்கூறுவதிலிருந்து நடந்தவற்றுக்கான அனைத்திலும் தனக்கும் பங்கிருப்பதை ஒரு பொறுப்புணர்வவோடு ஆரம்பத்திலேயே ஏற்றுக்கொண்டுதான் தன் சுயசரிதையைத் தொடர்கின்றார். அதற்காக வருத்தமும் அடைகின்றார். எனவே, தமிழினி ஒரு போராளியாக தனது நூலில் எதையும் நேர்மையாகப் பதிவு செய்திருக்கின்றார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
அதே நேரத்தில் இயக்கத்தின் எழுச்சிக் காலங்களில் எவரும் இயக்க நடவடிக்கைகளை எதிர்த்துக்கேட்கும் பூரண சுதந்திரம் பெற்றிருந்ததாக தான் அறியவில்லை என தமிழினி தன்நூலில் ஆங்காங்கே குறிப்பிட்டிருக்கின்றார். சில சமயங்களில் தன்னால் இயக்கத்தலைமையின் முடிவுகளை ஏற்க முடியாவிட்டாலும், இயக்கக் கொள்கையை தான் ஏற்றுக்கொண்டதால் எந்நிலைமையிலும் இயக்கத்திற்காக அவர் அமைதியாகச் செயற்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறார். மேலும், தமிழினி தனது நூலில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் மக்களுக்குமிடையே அதிக முரண்பாடுகளை ஏற்படுத்திய கட்டாய ஆட்சேர்ப்பு நிலை பற்றிக் குறிப்பிடும் பொழுது தனது எதிரான கருத்துகள் காரணமாகத் தன்னை வேறு துறைக்கு மாற்றியதாகக் குறிப்பிடுகின்றார். சமாதானக் காலகட்டத்தில் விடுதலைப்புலிகளின் ஆட்பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகச் செயற்படுத்தப்பட்ட கட்டாய ஆட்சேர்ப்புபோராளிகளுக்கிடையில் விமர்சனங்களையும் முரண்பாடுகளையும் ஏற்படுத்தியதாகக் கூறுகின்றார்” (பக்கம் 180). அத்துடன் 'தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத்தவறான முடிவுகளில் முக்கியமானது கட்டாய ஆட்சேர்ப்பு என்பது என் நிலைப்பாடு, இந்தக் காரியத்தில் சூழ்நிலைக் கைதிகளாகப் பல போராளிகளும், பொறுப்பாளர்களும் மன விருப்பின்றியே செயற்பட்டுக் கொண்டிருந்தனர் (பக்கம்  181) என்றும் தமிழினி கூறுகிறார்.இந்தச் செயல்பாடுகளில் மட்டும் இவரது முரண்பட்ட கருத்து நிலை காரணமாக அரசியல் துறை மகளிர் பொறுப்பாளராக மற்றொரு பெண் போராளி தன் இயக்கத்தில் நியமிக்கப்பட்டதாகவும் தனது நூலில் தமிழினி குறிப்பிடுகின்றார்.
தமிழினி தன் படைப்பின் வழி கூறப்பட்டுள்ளவற்றில் எவையெவை உண்மை என்பதனை நாம் பெரிதாக ஆராயத்தேவையில்லை. அதேநேரத்தில், அவர் கூறாத விசயங்களைச் சுட்டிக்காட்டி அவற்றுக்கு எதிராக உண்மையான ஆதாரங்கள் இருப்பின் தமிழினி ஏன் எழுதவில்லை என்று கேட்பதில் எந்த அர்த்தமுமில்லை. ஏனெனில் தன் வாழ்க்கையையே மக்களுக்காகத் தாரை வார்த்த ஒரு பெண் போராளியின் நேர்மையான உணர்வுகளை அது கொச்சைப்படுத்துவதாக அமைந்துவிடும். தன் வாழ்வின் பல்வேறு அவமானங்களை, துயரங்களை, தோல்விகளை அடைந்திருந்த நிலையிலும் தான் யாருக்காகப் போராடினாரோ அம்மக்கள்மீது கொண்டிருந்த பற்றினால் உடல்நிலை ஒத்துழைக்காத குறுகிய காலச் சூழ்நிலையிலும் தனது வாழ்வில் தன்னை அதிகம் பாதித்த உணர்வுகளை அடுத்த தலைமுறையினருக்கு எழுத்தின் வழி அறியத்தந்திருக்கிறார் என்றால் அவரது நோக்கத்திற்கு முதலில் தலைவணங்க வேண்டும்.
தமிழினி தன் எழுத்தினூடே ஒரு தலைமையின் அடிப்படையில் கட்டியெழுப்பட்ட அமைப்பினையும், அவ்வமைப்பின் அரசியலினையும் நியாயமாக கேள்விக்குட்படுத்தியிருக்கின்றார். முற்போக்குத் தேசியத்தத்துவம் (Pசழபசநளளiஎந யேவழையெடளைஅ) என்னும் அடிப்படையிலும் அவற்றை விவரித்து அதன் பண்புகளையும் அவர் குறிப்பிடுகின்றார். அதாவது,
1. முற்போக்குத் தேசியமானது ஏகாதிபத்திய எதிர்ப்பினைக் கொண்டதாக இருக்க வேண்டும்.
2. அந்நிய ஆதிக்க சக்திகளின் (சீனா இந்தியா போன்ற) நலன்களுக்குச் சேவை செய்வதாக ஒருபோதும் இருக்கக் கூடாது.
3. சமூக முரண்பாடுகள் விசயத்தில் போதிய தெளிவு இருக்கும் அதே சமயத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்குச் சார்பாகவும் அது விளங்க வேண்டும்.
4. ஏனைய தேசியங்களுக்கு ஈடான சம உரிமையை வேண்டும் அதே நேரம் ஏனைய தேசியங்களை அடக்குவதை, வெறுப்பதை மையமாகக்கொண்டு செயற்படக்கூடாது.
5. சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வு விசயத்தில் பல்வேறு வகையான தவறெண்ணங்கள் இருக்கும்.  இவற்றைக்கடந்து செயற்படும் வகையில் தெளிவு கொண்டிருக்க வேண்டும்.
6. முற்போக்குத் தேசியத்துக்குரிய உயர்ந்த மானுட விழுமியங்களைப் போராட்டத்தினூடு உருவாக்க வேண்டும். அதாவது விரிவான கருத்துப்பரிமாறல்களை அனுமதிக்க வேண்டும். ஜனநாயகம் நிலவ வேண்டும். வன்முறை மற்றும் சித்திரவதைகளை நியாயப்படுத்தவோ அல்லது அனுமதிக்கவோ கூடாது என்பார்.
இவ்விதமான முற்போக்குத் தேசியவாதத்தின் பண்புகளின் அடிப்படையில் நூலில் கூறப்பட்டுள்ள தலைமை மற்றும் அரசியல் சார்ந்த முக்கியமான குற்றச்சாட்டுகளை நூலைப் பற்றிக் குறிப்பிடாமல் நூலில் இடம்பெற்ற செய்திகளைக் கொண்டு அணுகுவதே அறிவார்ந்த செயலாகும்.
ஒரு நாட்டின் சமூக, அரசியல் மற்றும் பொருளியல் சூழல் காரணமாக ஒரு போராளி ஏன் உருவாகின்றார் என்பதற்கான உளவியல் காரணங்களை விவரிப்பதால் இந்நூல் உலக இலக்கியத்தினூடே முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் கல்வி கற்று கல்வியால் எதையும் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் இருந்த தமிழினியை இராணுவத்தினரின் எறிகணைத்தாக்குதல்கள், இந்தியப்படையினரின் தாக்குதல்கள், போரில் மரணத்தைத் தழுவிக்கொண்ட ஆண், பெண் போராளிகளின் நிலை, இவையெல்லாம் அவரது மனதைப்படிப்படியாக மாற்றுவதை இந்நூல் விவரிக்கின்றது. பாடசாலையில் படிக்கும்போது புலிகளின் மாணவர் அமைப்பில் இணைந்து செயற்பட்ட தமிழினி, ஒரு கட்டத்தில் ஆண், பெண் வேறுபாடில்லாமல் தினசரி நூற்றுக்கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் தமதுயிரைக் கொடுத்துக்கொண்டிருந்த சூழ்நிலையில் வெறும் பார்வையாளராக இருப்பது எனது மனதில் பெரும் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்திகிறது. அதனால் தொடர்ந்து படிக்கக் கூடிய சூழ்நிலையும் உருவாகுமென தான் நினைக்கவில்லை. ஒரு குடும்பத்தில் ஒருவராவது போராடச்சென்றால்தான் அடுத்த சகோதரர்களாவது நிம்மதியாக வாழ முடியுமென தான் நம்பியதாகக் குறிப்பிடுகிறார்” (பக்கம் 31) இவ்வாறு பள்ளிக்குச்சென்ற மாணவியொருத்தி எவ்விதம் ஆயுதம் தாங்கிய போராளியாகப் பரிணாமம் அடைகின்றார் என்பதை ஒரு வாக்குமூலமாகவே தனது நூலில் குறிப்பிடுகின்றார்.
இயக்கம் முழுவதும் தலைமையை மையமாக வைத்துக் கட்டமைக்கப்பட்டுள்ளதை அவர் கேள்விக்குட்படுத்துகின்றார். ஆரம்பத்தில் ஏனைய இயக்கப் போராளிகளைப்போல் அவரும் ஒரு தலைமை என்னும் அடிப்படையில்தான் இயங்குகின்றார். ஆனால் அதுவே பின்னர் பேரழிவுகளுக்குக் காரணமாக விளங்கும்போது அவரால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எத்தனையோ நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து ஒரு போராட்டத்தை முப்பது வருடத்திற்கும் மேலாக பெரும் படைபலத்துடன் கட்டி வளர்த்தவர் என்ற பிரமிப்போடுதான் என்னைப்போன்ற பல்லாயிரக்கணக்கான போராளிகளும், மக்களும் தலைவரைப் பார்த்தோம். தலைவர் எடுத்த முடிவுகள் பல சந்தர்ப்பங்களில் விமர்சனத்துக்குள்ளாகும் போதும், அவர் மக்களின் நலனுக்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும்தான் இப்படியான முடிவுகளை எடுக்கின்றார் எனவும், தலைவர்  ஒரு முடிவு எடுத்தால் அதில் நிச்சயமாக ஒரு நியாயம் இருக்கும் எனவும் ஒவ்வொரு போராளியும் எவ்வித ஐயப்பாடுமின்றி நம்பினோம். தலைவர்  எடுக்கும் முடிவுகளை விமர்சிப்பதோ, கேள்வி கேட்பதோ தெய்வக்குற்றம் இழைப்பதற்குச் சமமானதாக இயக்கத்தினுள்ளே கருதப்பட்டது. இந்தப்போக்கின் வளர்ச்சியே இயக்கத்தின் உள்ளேயான விவாதத்தையும் விமர்சனத்தையும் இல்லாதொழித்து அதன் மிக அவலகரமான முடிவுக்கும் வழி வகுத்தது. எல்லாம் அவர்தான் எனக்கொண்டாடியது மட்டுமில்லாமல் இறுதித்தோல்விக்கும் அவரே காரணம் என்ற குற்றத்தையும் வரலாறு அவர் மீது சுமத்தி நிற்க வேண்டியதாயிற்று என்பார் தமிழினி.” (பக்கம்  164) இதைப்பற்றி மேலும் கூறும் பொழுது எத்தனையோ இலட்சம் பேருடைய இரத்தமும் கண்ணீரும் இயக்கத்தினுடைய வளர்ச்சிக்கு நீர் பாய்ச்சியிருக்கிறது. அப்படியிருக்கையில் விடுதலைப்புலிகள் இயக்கமும், தமிழ் மக்களுக்கான ஆயுதப்போராட்டமும் தனியொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நின்றதும், அவருடைய விருப்பு வெறுப்புகளுக்கேற்ற தீர்மானங்களின்படியே வழிநடத்தப்பட்டதும் எத்தகைய மோசமான இன அழிவை ஏற்படுத்தியிருந்தது” (பக்கம் 206) எனத் தன் சுயசரிதையின் வழி கடுமையாகச் சாடியிருக்கிறார் தமிழினி. இவ்வாறான அவரது மன எண்ணங்கள் தனிப்பட்ட மனிதர் மீதான வெறுப்பல்ல. தான் சார்ந்திருந்த இயக்கத்தினூடான அதன் கட்டமைப்பு மீதான சாடல்களே ஆகும். ஏனெனில், “கள முனையில் நின்று எந்தக் கேள்விகளும் கேட்காது எமது சக போராளிகள் தமதுயிரை அர்ப்பணித்துக்கொண்டிருந்தார்கள். அத்தியாகங்களுக்கு முன்னால் வேறு எதுவுமே எழுந்து நிற்க முடியாதிருந்தது. வீரமரணம் அடையும் வரை விடுதலைப்புலிகள் இயக்கத்தின் விசுவாசமிக்க போராளியாகக் கடமையாற்ற வேண்டும் என்பதைத் தவிர எனது சிந்தனைகளில் வேறு எதுவுமே தென்படவில்லை” (பக்கம் 53-54) எனத் தமிழினி கூறுவது போரின் உச்சகாலகட்ட எதார்த்தினை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
இயக்கம் பற்றிய சுயவிமர்சனங்களில் முக்கியமானது சில பயிற்சி முகாம்களில் நடைபெற்ற அத்துமீறல்கள் என்பார் தமிழினி. ஏனெனில், தனது நெருங்கிய தோழியான சாம்பவி தனது பயிற்சி முகாம் அனுபவங்களைத் தன்னிடம் கூறும்பொழுது, “குறுகிய மனப்பாங்கும், வக்கிர குணம் கொண்டவர்களின் கரங்களில் ஆயுதங்களும், அதிகாரமும் போய்ச்சேரும் போது எத்தகைய அத்துமீறல்கள் நடைபெறும் என்பதற்கு அந்தப்பயிற்சி முகாமின் ஒரு சில ஆசிரியர்கள் உதாரணமாக இருந்தனர். அரசியல் போராளிகளாகப் பணியாற்றிய பின்னர் ஆயுதப் பயிற்சி பெறுவதற்காக வந்தார்கள் என்ற காரணத்துக்காக வயது வித்தியாசமின்றி அங்கே கொடூரமான முறையில் பயிற்சி பெறுவோர் நடத்தப்பட்டனர். இரத்தக் காயங்கள் ஏற்படுமளவுக்கு அடியுதைகளும், மனதை நோகடிக்கும் குரூரமான வார்த்தைகளும், தனிப்பட்ட பழிவாங்கல்களும் என அந்த மகளிர் பயிற்சி முகாமில் அரங்கேறிய சம்பவங்கள் ஒட்டுமொத்தமான பெண் போராளிகளுக்கும் மிகத்தவறான முன்னுதாரணங்களாக இருந்தன என்பார்.” (பக்கம்.58-59) ஆனால், இவை எவ்வகையான சித்திரவதைகள் என்பதை மட்டும் தமிழினி தன் நூலில் விரிவாக எடுத்துரைக்கவில்லை. மேலும், முஸ்லீம் மக்களைக் கட்டாயமாக வெளியேற்றியது பற்றித் தமிழினி கூறும்பொழுது, “மிகவும் சராசரியான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருந்த அந்த மக்களைச் சந்தித்த பொழுது என் மனதில் மிகுந்த குற்றவுணர்ச்சி ஏற்பட்டது. அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட எமது இயக்கம் இந்த அப்பாவி மக்களின் வாழ்வுரிமையை அடக்குமுறைக்கு உள்ளாக்கியதன் நியாயத்தை எனது இதயத்தால் ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது என்பார். (பக்கம்.66)
1996 - இல் இராணுவத்தினர் வடமராட்சியைக் கைப்பற்றி வலிகாமத்தை முழுமையாகக் கைப்பற்றும் நடவடிக்கையை மேற்கொண்டபோது இயக்கத்தின் கட்டளைக்கேற்ப அனைத்து மக்களும் வன்னி நோக்கி இடம்பெயர்ந்தனர். சில மணி நேரத்திற்குள்  ஏறக்குறைய ஐந்து இலட்சம் மக்கள் நாவற்குழி பாலத்தைக் கடந்த நிகழ்வை எப்படிப் பதிவு செய்தாலும் புரிய வைக்க முடியாத மனித அவலம் என்றே கூறவேண்டும் என்பார்.கிழக்கு மாகாணத்தளபதியான கருணா அம்மானின் பிரிவினைத் தொடர்ந்து இயக்கத்திற்குள் நடந்த சகோதர யுத்தத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் தமிழினி கிழக்கு மாகாணப்போராளிகளை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் என்ற பெயரில் இயக்கத்திற்குள் அனைவரும் வெறுக்கத்தக்க ஒரு கொடூரமான சகோதர யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. பல வருட காலமாக என்னுடன் பழகிய பல போராளிகள் இரு தரப்பிலும் உயிரிழந்து போயிருந்தனர்.” (பக்கம் 162) என்று கூறுவார்.
விடுதலைப்புலிகள் அமைப்பு பெற்ற வெற்றிகளின் காரணமாக ஓர் அரச இயந்திரம் போல் தன்னை விசாலித்துக்கொண்டதனால் இயக்கத்தின் கூடுதலான மூளைப்பலம் நிர்வாகச்சிக்கலில் வீணே சிதறடிக்கப்பட்டது. பல திறமையான போராளிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு நிர்வாகச் சிக்கல்களில் தமது நேரத்தையும் திறமையையும் வீணடித்துக் கொண்டிருந்தனர் என்பார்.” (பக்கம் 182) இது இயக்கத்தின் வளர்ச்சியைத் தடைசெய்ததாக தமிழினி தன் நூலின் வாயிலாக கூறுகிறார். மேலும், இராணுவரீதியில் சாதனைகளைப் படைத்த இயக்கத்தால் சமாதான காலகட்டத்தில் அரசியல் ரீதியான வெற்றிகளைக் குவிக்க முடியவில்லை என்பதும் தமிழினியின் நிலைப்பாடு. இதனை, “யுத்தகளத்தில் பல வெற்றிகளைக் குவித்த தலைவர் சமாதானச் சூழ்நிலையில் அரசியல் ராஜதந்திர நுணுக்கங்களைத் துணிச்சலுடன் பயன்படுத்தித் தமிழர்களுக்கு உறுதியான ஒரு அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ளும் நிலையை நோக்கி முன்னேற முடியாமல் திணறினார் எனக்கூறுவார்.” (பக்கம் 168). அதேநேரத்தில், “புலிகளின் போரியல் வெற்றிகளில் மக்களுக்கிருந்த பிரமிப்பான நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் தூர நோக்குடனான புலிகளின் அரசியல் செயற்பாடுகளில் எப்போதுமே இருந்ததில்லை என்பது தமிழினியின் கூற்று. (பக்கம் 15) ஏனெனில், “ஆயிரமாயிரம் உயிர்களின் அர்ப்பணிப்பு வீண்போகாதபடி கனிந்து வந்த அரசியல் சூழ்நிலைகளைத் தலைவர் பயன்படுத்தி மக்களுக்கு ஒரு நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவார் என அனைத்துப் போராளிகளையும் போல் நானும் உறுதியாக நம்பினேன். இறுதிப் போருக்கான முடிவைத் தலைமை எடுத்தபோது, எனது சிறிதான அறிவுக்கெட்டிய வகையில் அது ஒரு சரியான முடிவாகப்படவேயில்லை என்பார்.” (பக்கம் 218) 
தனது நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றி குறிப்பிடும் பொழுது, “எனது பாடசாலைக் காலத்தில் விடுதலைப்புலிகள் இயக்கம் தனிப்பெரும் விடுதலை இயக்கமாகப் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தது. மகளிர் படையணிகள் கள முனைகளில் வீர, தீரச் சாதனைகளையும், உயிர் அர்ப்பணிப்புகளையும் நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள். நான் இயக்கத்தில் இணைந்து கொண்டமைக்குப் பொதுவான போராட்டச் சூழ்நிலைகளே காரணமாக இருந்த போதிலும், ஒரு பெண் என்ற நிலையில் எனது குடும்பத்தினதும், என்னைச்சூழ்ந்திருந்த சமூகத்தினதும், பெண் சார்ந்த கருத்து நிலையை உடைத்து ஒரு புரட்சி செய்யக்கூடிய சந்தர்ப்பமாகவும் அதைக் கருதினேன். நான் இயக்கத்தில் இணைந்த பள்ளிப்பருவத்தில் ஒரு வேகமும், துடிப்பும் என்னிடம் இருந்ததே தவிர, அக்காலகட்டத்தில் இருந்த அரசியல் நிலைமைகள் மற்றும் சமூகம் பற்றிய எவ்விதமான புரிதலும் எனக்கிருக்கவில்லை என்பார்.” (பக்கம்.73) மேலும், “பெண்கள் ஆயுதப்பயிற்சி பெற்றபோது, அவர்களால் தமது உடல் வலிமையை நிரூபிக்கக்கூடியதாக இருந்த போதிலும், அவர்களுடைய அடிப்படைச் சிந்தனைகளில் எந்தளவுக்கு மாற்றம் ஏற்பட்டிருந்தது என்பது கேள்விக்குரியதாயிருந்தது. குடும்பம் என்ற அமைப்புக்குள்ளிருந்து வெளியே வந்து, இயக்கம் என்ற அமைப்பிற்குள் புகுந்து கொண்ட புலிப்பெண்கள் அனைவருமே புரட்சிகரமான புதிய சிந்தனை மாற்றத்திற்கு உட்பட்டவர்கள் என்று கூறிவிட முடியாது. எவ்வாறு ஒரு கட்டுக்கோப்பான குடும்பப்பெண்ணாக வீட்டில் வளர்க்கப்பட்டோமோ, அதேபோலக் கடினமான இராணுவப்பயிற்சிகளைப்பெற்ற, கட்டுக்கோப்பான மகளிர் படையணிப் போராளிகளாகவே இயக்கத்திலும் வளர்க்கப்பட்டோம் எனக்கூறுவார்.” (பக்கம்.75-76)
பெண்களிடையே சுதந்திரமான ஒரு மனோபாவத்தை வளர்ப்பதற்குரிய தீர்க்கமான கொள்கைத்திட்டங்கள் எவையும் எங்களிடமிருக்கவில்லை. பெண்கள் வீட்டுக்கு வெளியே வந்து ஆயுதமேந்துவதன் மூலம், சமூகத்தையே நாம் மாற்றி விடலாம் எனக்கனவு கண்டோம். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், பெண் போராளிகள் ஆயுதமேந்திப் போராடியதால், போர்க்களத்தின் பல வெற்றிகளுக்குக் காரணகர்த்தாக்களாக இருக்க முடிந்ததே தவிர, சமூகத்தில் பெண்கள் சார்ந்த கருத்தமைவில் எவ்விதமான மாற்றங்களையும் எங்களால் ஏற்படுத்திவிட முடியவில்லை. தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் விடுதலைக்கான பாய்ச்சல் வளர்ச்சியானது ஆயுதப் பெண்களின் பிம்பமாகவே தொடங்கி ஆயுதப் போராட்டத்தின் தோல்வியுடனே அது முடிந்தும் போனது." (பக்கம்.76) “பெண்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கெடுப்பதன் மூலமே சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்று  கருத்துகளை நான் கூறியிருக்கிறேன். ஆனாலும், ஆயுதப்போராட்டத்தோடு சமாந்தரமான நிலையில் சமூக மாற்றத்திற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன என்று கூறுவதற்கில்லை என்பார்.” (பக்கம்.77)
அரசியல்துறை மகளிர் பிரிவினுடைய பணிகளாக சமூகத்தில் பெண்ணுரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், பெண்களின் வாழ்கைத்தரத்தை மேம்படுத்துவதும், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்களை இனங்கண்டு அவர்களுக்கான புனர்வாழ்வளிப்பதும், இன்னும் பரந்துபட்ட ரீதியில் சமூக மாற்றத்துக்காக உழைப்பதும் என்பனவாகவே இருந்தன. இதன் அடிப்படையில்தான் அரசியல் மகளிர் பிரிவின் வேலைத்திட்ட அலகுகளும் பிரிக்கப்பட்டிருந்தன. ஆனாலும் நடைமுறையில் சாத்தியமானது என்னவோ இயக்கத்திற்கு புதிய போராளிகளை இணைப்பதும், பெண்களுக்கென குறிப்பிட்ட சில வேலைகளை மாத்திரம் செய்ய முடிந்ததுமேயாகும். ஏனெனில் இயக்கத்தின் முழுக்கவனமும், மொத்த வளங்களும் யுத்தத்தில் ஈட்டப்பட வேண்டிய வெற்றியை நோக்கியே திருப்பபட்டிருந்தன.” (பக்கம்.77) அந்த அர்ப்பணிப்பின் அனுகூலங்களை அனுபவிக்கச் சித்தமாயிருக்கும் சமூகம் அவளின் போராட்டத்திற்குப் பின்னரான வாழ்வை கொச்சைப்படுத்தியே பார்க்கிறது. பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் உடல்களை விளம்பரப்படுத்தி, அரசியல் பிழைப்பு நடத்துகிறது. போராட்டத்தில் பங்குபெற்று உயிர் மீண்ட பெண்கள் அனைவருமே மானமிழந்து போய்த்தான் வந்திருக்கிறார்கள் என்ற கருத்துகளைப் பரப்புவது எத்தனை மோசமான இழிசெயல் எனவும் கடிந்துரைக்கிறார். எனவே, தனது நூலில் பெண்கள் பற்றிய சமூகம் மீதான விமர்சனத்தையும்கூட மிகவும் நேரிடையாக வெளிப்படுத்தியிருக்கிறார் தமிழினி;.
விடுதலைப்புலிகளின் அரசியல், போர்ச்செயற்பாடுகளையும், புலிகளின் வன்னிப்போர், பூநகரிச்சமரான தவளைப்பாய்ச்சல், முள்ளிவாய்க்காலில் போரின் இறுதிக்காலத்து அனுபவங்கள், போரின் பின்னரான தடுப்பு முகாம், வெலிக்கடைச்சிறை வாழ்வு மற்றும் பூந்தோட்டத்துப் புனர்வாழ்வு போன்ற பல்வேறு நிகழ்வுகளை தமிழினி இந்நூலில் விரிவாகவே ஆவணப்படுத்தியிருக்கின்றார். மேலும், தமிழினி இயக்கத்தில் சேர்ந்தபொழுது, ஆயுதப்பயிற்சி எடுப்பதற்கு முன்னர் தான் ஆற்றிய அரசியற் செயற்பாடுகளையும், அவரது அச்செயற்பாடுகள் பற்றிய சிந்தனைகளையும், புலிகளின் மக்களுடனான அரசியல் நடவடிக்கைகளையும் தனது நூலில் சுயவிமர்சனம் செய்துள்ளார்.
புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் மேற்பார்வையில் பயிற்சி கொடுக்கப்பட்டு புலிகளின் தாக்குதல் வரலாற்றிலேயே முதல் தடவையாக ஒரு இராணுவ - கடற்படைக்கூட்டுப் படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒப்பரேசன் தவளைஎனப்படும் தவளைப்பாய்ச்சலாகும். தவளையானது நீரிலும், நிலத்திலும் வாழும் வல்லமை மிக்கது. மேற்படி தாக்குதலும் நீரிலும், நிலத்திலுமுள்ள படைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல். விடுதலைப்புலிகள் நீரிலும், நிலத்திலும் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தும் வல்லமை மிக்கவர்கள் என்பதை உணர்த்துவதற்காக இடப்பட்ட பெயர்தான் தவளைப்பாய்ச்சல்.இப்போரில் ஈடுபட்ட போராளிகளின் உண்மையான உணர்வுகளை தமிழினி தனது நூலில் பதிவு செய்திருக்கிறார். பல போராளிகள் தமது குடும்பத்தவர்களுக்கு தமது இறுதி மடல்களை எழுதிக்கொண்டிருந்தனர். எனது நெருங்கிய பல நண்பிகளும் இத்தாக்குதலில் பங்கெடுத்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவுகள், நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், உயிர் மீதான உத்தரவாதமின்மை, வெளிப்படுத்தமுடியாத விரக்தி என நிச்சயிக்கப்பட்ட யுத்தமொன்றில் பங்குபெறும் போராளிகளின் இறுதிக்கணங்களில் அவர்களுடைய கண்களில் தேங்கியிருக்கும் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிந்த எவராலும் மீண்டுமொருமுறை யுத்தத்தைப்பற்றி பேசவோ அல்லது நினைத்துப்பார்க்கவோ முடியாது என்பார்.” (பக்கம் 57)
இந்த யுத்தத்தில் பெரிய வெற்றிகளை அடைந்த விடுதலைப் புலிகள் இயக்க வரலாற்றில் முதல் தடவையாக இராணுவத்தினரின் யுத்த டாங்கிஒன்று கைப்பற்றப்படுகின்றது என்பதனை எடுத்துரைக்கும் தமிழினி, இச்சமரில் இழந்த தனது தோழிகள் பற்றியும் விவரித்திருக்கின்றார். அதில், அவர்களது காதல் அந்தரங்க உணர்வுகளைச் சொல்லி நெஞ்சினைத்தொடும் வகையில் அவர்களது உயிரிழப்பையும் எடுத்துரைக்கின்றார். குறிப்பாக சாம்பவி பற்றிய அவரது கூற்று முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில், “வயல் வெளிகளுக்கூடாக நானும் சாம்பவியும் தவழ்ந்தபடி முன்னேறிக்கொண்டிருந்தோம். மழை தொடர்ந்து பெய்து கொண்டேயிருந்ததால் வெள்ளம் தேங்கிக் கிடந்தது. தூரத்தே உயரமான நிலை ஒன்றிலிருந்து தொடர்ந்து தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த இராணுவத்தின் குறிபார்த்துச் சுடுபவனின் இலக்குத் தவறாதவைகள் அந்த வயல்வெளியில் பல போராளிகளின் உயிர்களைக் குடித்துக்கொண்டிருந்தன. சிறிதாகக் கூடத்தலையை நிமிர்த்திப்பார்க்க முடியாத நிலையில் சேற்று வயல்களுக்கூடாக நாங்கள் தவழ்ந்து கொண்டிருந்தோம். எனது பக்கவாட்டில் ஊர்ந்துகொண்டிருந்த சாம்பவியிடமிருந்து  திடீரென ஹக்என வினோதமான சத்தம் கேட்டது.  திரும்பிப்பார்த்தேன். அவளது முகம் சேற்றுக்குள் புதைந்துபோய்க்கிடந்தது. நான் அவளது தலையை நிமிர்த்திப் பார்த்தபோது கடைவாயில் இரத்தம் கசிந்துகொண்டிருந்தது என்பார்.” (பக்கம் 59).
இதுபோலவே, இச்சமரில் பலியான தன் நெருங்கிய தோழி தாமரை பற்றியும் தமிழினி குறிப்பிடுகிறார். நீ யாரை நினைப்பாய் தாமரை, அவளின் வளமையான சோக விழிகள் ஒரு தடவை மின்னியது. காய்ந்து போயிருந்த உதடுகளில் மெல்லிய புன்னகை நெளிந்தது. நான் விரும்பியிருந்தவரைத்தான் நினைப்பேன் என்றால், அவளுக்குள் ஆழப்புதைந்து கிடந்த காதலின் இரகசியக் காயத்தை அப்போதுதான் எனக்குத் திறந்து காட்டியிருந்தாள். ஆனால், முன்னொரு யுத்தத்தில் அவளுடைய போராளிக் காதலன் ஏற்கனவே உயிரிழந்திருந்தான் எனவும் குறிப்பிடுவார்.மேலும், “போர்க்களத்தில் கண்ட இன்னொரு மறக்க முடியாத காட்சியும் எனது ஆழ்மனதில் பதிந்துபோன சித்திரமாகி விட்டிருந்தது. இராணுவத்தினரினதும், விடுதலைப்புலிகளினதும் உயிரற்ற உடல்கள் மழைத்தண்ணீரில் ஊறிப்போய், ஆங்காங்கே விறைத்துக்கிடந்தன. அவர்கள் உடல்களிலிருந்து வடிந்திருந்த சிவப்புக் குருதி மழை நீரில் கரைந்து தண்ணீரோடு கலந்து ஓடிக்கொண்டிருந்தது.  சற்று நேரத்திற்கு முன்புவரை தீராப் பகையுணர்ச்சியோடு எதிரும் புதிருமாக நின்று போரிட்டவர்கள் நிலத்தில் சடலங்களாக சிதறிக்கிடந்த காட்சி ஒரு தாயின் மடியில் உறக்கத்தில் புரண்டு கிடக்கும் குழந்தைகளையே நினைவுபடுத்தியது. எல்லா வேறுபாடுகளும், முரண்பாடுகளும், பகைமைகளும் அர்த்தமிழந்து போகும் இடம் போர்க்களம்தான் என்பதை முழுமையாக உணரக்கூடிய அறிவு உண்மையாகவே அப்போது எனக்கிருக்கவில்லை என்பார்.” (பக்கம் 60).
இவ்விதமான தமிழினியின் விவரிப்பு, போரில் நேரடியாகப் பங்குபெற்ற அவரது அனுபவத்தைச் சிறப்பாக ஆவணப்படுத்தியிருப்பதாகச் சொல்லலாம். மேலும், தமிழினியின் தன்னுணர்வுகளையும், தன் வாழ்வின் சம்பவங்களையும் கவித்துவமான மொழிச்சிறப்பால் வெளிப்படுத்தியிருக்கும் விதம் உண்மையில் பாராட்டத்தகும். ஏனெனில், பிரச்சாரமற்ற, அனுபவத்தின் வெளிப்பாடாக, மானுட நேயம் மிக்க அவரது எழுத்து போர்க்களக்காட்சிகளை விவரித்திருந்த விதம் நெஞ்சைத்தொடுவதாகவும், யுத்தம் பற்றிய புரிதல்கள் இலக்கியச்சிறப்பு மிக்கதாகவும் அமைந்து சிறக்கின்றது.
மேலும், “எந்த ஓர் உயிரினமும் போராடினால்தான் வாழ்க்கை. இது இயற்கையின் நியதி. அந்தவகையில் எமது மக்கள் தமது அரசியல் உரிமைகளுக்காகப் போராட வேண்டியவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் இனியும் ஆயுதப் போராட்டம் என்ற வழிமுறையில் எமது அடுத்த சந்ததி சிந்திக்கக் கூடாது என்பதை எனது ஆத்மாவிலிருந்து கூறுகிறேன். இந்த நாட்டில் இனியும் இரத்த ஆறு பாயக்கூடாது. ஏந்த அன்னையர்களும் தனது பிள்ளையைச் சுமக்கும் பிரேதப் பெட்டிகளில் அடித்துக்கொண்டு அழக்கூடாது. எமது எதிர்காலச் சந்ததி தமது அறிவாற்றலால் உலகத்தை வென்றெடுக்க வேண்டும். மனங்கள் ஒன்றுபட்ட நவீன உலகத்தின் தரிசனங்களை அவர்கள் நேரடியாக அனுபவிக்க வேண்டும். போர்க்களங்களில் உயிரைக் கொடுத்த வீரர்கள் ஒவ்வொருவரும் இந்த யுத்தம் எங்களோடு முடிந்துபோக வேண்டும் என்றுதான் எண்ணினார்களே தவிர அடுத்த சந்ததிக்கும் அது தொடரவேண்டும் என அவர்கள் நினைத்ததில்லை எனக்கூறுவார்.” (பக்கம்.16)
முதல் முறையாக விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவர் தன்னை, தான் சார்ந்திருந்த இயக்கத்தை சுய விமர்சனத்துக்குள்ளாக்கியது வரவேற்கத்தகுந்த செயலாகும். ஏனெனில், சுயவிமர்சனங்கள் எப்பொழுதுமே ஆரோக்கியமானவை. இதனை நினைத்தவரெல்லாம் எழுதிவிட முடியாது. அவை எதிர்காலத்தில் அனைவரையும் சரியான பாதையில் நடப்பதற்கு வழிகோலுபவையாக அமையவேண்டும். அப்போதுதான் சுயசரிதை என்பதும் முக்கியத்துவம் பெறும். அந்தவகையில், ‘ஒரு கூர்வாளின் நிழலில்என்னும் தனது சுயசரிதை நூலில் தமிழினி பெண் விடுதலை பற்றித்தெரிவித்திருந்த கருத்துகள்; ஆயுதமெடுத்துப்போராடிய அமைப்பின் பெண் போராளி என்ற வகையில் அவையனைத்தும் முக்கியமானவையே. மேலும், தான் இணைந்து இயங்கிய மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய இயக்கமொன்றினை விமர்சித்ததால் ஒரு கூர்வாளின் நிழலில்என்னும் பெயரினை தன் சுயசரிதைக்கு தரித்து அர்த்தம்தர முயன்றிருப்பதாகவும் தோன்றுகிறது.
இந்தச் சுய விமர்சனத்தால் தமிழினி என்னும் பெண் போராளியொருவர் வந்தடையும் முடிவு தொடர்ந்து போராடுவேன்போருக்கான பாதையைவிடக் கடினமானது உண்மையான சமாதானத்தின் வழி என்பதையும் நானறிவேன் எனக் கூறுவதோடு, “எனது மாணவப்பருவத்தில் நான் சார்ந்த சமூகத்திற்கு ஏதாவது நன்மையான செயலை ஆற்ற வேண்டுமென்ற பெரு விருப்போடுதான் ஒரு போராளியாக மாறினேன். எனது வாழ்வின் இறுதி மூச்சு வரை ஒரு போராளியாகவே இருந்து மக்களுக்கு உதவ விரும்புகின்றேன். ஆயுதம் ஏந்துவதன் மூலமோ அல்லது பழிக்குப் பழி வாங்குதலின் மூலமாகவோ எனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் உலகத்திற்கும் எந்த நன்மைகளையும் நாம் செய்து விட முடியாது என்பதை அனுபவத்தின் பாடங்கள் கற்றுத்தந்து விட்டன. அமைதியும் சமாதானமுமே எந்தவொரு சமூகத்தினதும் வளர்ச்சிக்கான இயல்பான சாத்தியப்பாட்டை உருவாக்கும். அந்த வகையில் எனது இறுதிக்காலம் வரை எனது சமூகத்திலும் நாட்டிலும் மட்டுமல்ல உலகத்தின் அமைதிக்காகவும் சமாதானத்திற்காகவும் எனது போராட்டம் தொடரும்.எனக்கூறிய தமிழினி இறுதிவரை போராடியே மறைந்திருக்கின்றார்.
ஊர்மிளா பவார் - முடையும் வாழ்வு (ஒரு தலித் பெண்ணின் வாழ்க்கைக் குறிப்பு)
ஊர்மிளா பவார்மகர் எனும் தலித் சமூகத்தில் பிறந்தவர். முதன்மையான தலித் பெண் எழுத்தாளர். மகாராஷ்ட்ராவில் நன்கு அறியப்பட்ட தலித் செயல்பாட்டாளர், பெண்ணியப் போராளி. குறிப்பிடத்தகுந்த சிறுகதை எழுத்தாளர், தலித் பெண்ணிய வரலாற்றாளர், மத அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர். ஊர்மிளா பவாரின் ஆய்தம் என்ற சுயசரிதையை த லீவ் ஆப் மை லைப்என்னும் பெயரில் மராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாயாபண்டிட்டும், தமிழில் முடையும் வாழ்வுஎன போப்பும் மொழிபெயர்த்து வழங்கியுள்ளனர். மராத்தியில் முதன்முதலாக எழுதப்பட்ட தலித் பெண்ணின் சுயசரிதை இது. இந்நூல் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தொடரும் மரபுக்களத்தில் புதிய உடைப்பு. விவாதிக்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சனைகளும், சமூக உட்கூறுகள் பலவும் இந்நூலில் பொதிந்திருப்பதால் வாசிப்பு வெளியில் முதன்மையான இடத்தை பெற்றுள்ளன. மராத்தி தலித் எழுத்து வரலாற்றில் நல்லதொரு வழிகாட்டியாக விளங்கும் இந்நூல், மிகுதியான விமர்சனத்தையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. மேலும், தலித் பெண்கள் எதார்த்த வாழ்விலிருந்து இயக்கத்திற்கு எப்படித் தாமாகவே செயலூக்கம் பெறுகிறார்கள் எனவும், தலித் பெண்கள் குறித்து வெளிப்படையாக கருத்துரைக்கும் இவரின் ஆற்றலும், பெண்ணிய நோக்கில் தலித் குடும்பங்களில் நிலவும் ஆணாதிக்க நிலைப்பாடுகள் பலவற்றையும் இவர் ஆவணப்படுத்தியுள்ளார். இவரது செயல்பாடுகள் எப்பொழுதும் தனித்துவமானவை. குறிப்பாக, அம்பேத்கரின் இயக்கத்தில் பெண்கள் பங்கேற்பு பற்றி இவர் எடுத்துரைத்த வரலாறு மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
                தொடக்ககால தலித் படைப்புகளைப் போலவே ஊர்மிளா பவாரும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்துள்ளார். அவரது இச்சுயசரிதை ஆண், பெண் எழுத்து முறைக்கு புதிய வரவாகவும், முக்கியமான நீட்சியாகவும் அமைந்துள்ளது. சமூகம் முழுவதும் எல்லா நிலையிலும் உயர்சாதியினரின் சுரண்டல் நிலை நீடிப்பதால், அடித்தள மக்களின் வாழ்வு நசுக்கப்பட்டு மிகவும் பின்தள்ளப்படுவதை தனது படைப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். தலித் மக்களின் வசிப்பிடம் பெரும்பாலும் கிராமத்தின் நடுவில் அமைந்திருப்பதன் நோக்கம் மேல்சாதியினரின் அனைத்து விதமான வேலைப்பாடுகளுக்கு அவர்களை பணிப்பதற்கும், பிரச்சனையின் போது நாலாபக்கமிருந்தும் அவர்களைத் தாக்குவதற்கும் வசதியாக இருக்கும் என்ற காரணமே எனத் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
                மேலும், ஒரு சிறிய கிராமப் புறத்திலிருந்து பெரு நகரத்திற்கு இடம் பெயரும் நெடிய பயணத்தில் ஒரு தலித் பெண் எதிர் கொள்ளும் போராட்டத்தையும், அது அவரை அறிவுஜீவியாகவும், எழுத்தாளராகவும் மாற்றிய அனுபவித்தையும் ஊர்மிளா பவார் நினைவுகளாக நம்முன் பதிவு செய்துள்ளார். ஒரு தலித் பெண்ணியவாதியின் கனவான நீதி, சமத்துவம், விடுதலை, புரட்சிகரம், குடிமைத்துவம், முன்னேற்றம், ஜனநாயகம் ஆகிய மதிப்பீடுகளில் தனது ஒருங்கிணைந்த பங்கை தமது எழுத்தின் மூலம் உருவாக்கவும் முயன்றுள்ளார். இம்முயற்சிதான், தலித் பெண்ணிய, புரட்சிகர போராட்டப் பாரம்பரியத்தில் இதுவரை எழுதப்பட்ட மற்ற நூல்களில் இருந்து அவரையும், அவரது படைப்பையும் தனித்துவம் வாய்ந்ததாக மாற்றியிருக்கிறது. எனவேதான், ஊர்மிளா பவாரின் இந்நூலை மொழிபெயர்த்து வழங்கிய போப் அசாதாரண அனுபவத்தை அளித்தது எனக் கூறியுள்ளார்.
                முதலாளித்துவப் போக்கில் சுயசரிதை என்பது தனிமனிதனை அடையாள உணர்வில் இருந்து துவங்குவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், சுயசரிதை என்பது தனியொருவனைச் சார்ந்தது அல்ல, மாறாக அவனது ஒட்டு மொத்த சமூகமும் தனது மகரிய நினைவுகளைப் பெருமையுடன் பேசுவது, மகாராஷ்ட்ரா கிராமங்களில் உள்ள அனைத்து தலித் சமூகங்களும் முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டெழுவதை பெருமையுடன் எடுத்துரைக்கிறது இந்நூல்.
                தலித் பெண்கள் அடுத்தடுத்த நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். தனிப்பட்ட முறையிலும் பொதுத்தளத்திலும் அதிகரித்து வரும் வறுமை, வேலையின்மை, சாதிய மோதல் ஆகியவற்றின் தாக்கத்தால் கடுமையாகத் தாக்கப்படுகின்றனர். சாதியப் போராட்டத்தில் பலர் சமஅளவில் பங்கேற்றனர். தலித்தியப் போராட்டங்களில் துவக்கத்தில் இருந்து இன்றுவரை பெருந்திரளாகத் திரண்டனர். பயங்கரமான தாக்குதலைச் சந்தித்த போதிலும் தொடர்ந்து பங்கேற்று வந்தனர். பொதுக்கிணற்றில் தண்ணீர் எடுக்க முடிவதில்லை. உள்ளுர் பஞ்சாயத்துகளில் போட்டியிட்டு தேர்வு பெற்ற பின்னும் செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை. ஆதிக்க சாதியினரின் ஒட்டுமொத்த சகிப்பற்ற அரசியலால் பாலியல் வன்முறைகள் அதிகரித்தன. ஆதிக்கச் சாதியினர் தலித்துகளை அடக்கு முறையின் மூலமாக பயங்கரமாக தண்டித்து அழிக்க முயன்றனர். ஊர்மிளா தனது நினைவுகளில் இருந்து வர்ணிப்பது போல தலித் மக்களுக்கு கிராமங்களில் மராத்வாடாக்களில் மனிதரில் கேவலமான நிலை நீடிக்கிறதென்றால், நகர்ப்புறத்து சேரிகளிலும், சாக்கடைக் கரைகளிலும் எலிகள் கால்களைச் சுரண்டும் வளைகளிலும் வசித்து வருகின்றனர் என்பார்.
இதுபோன்ற தன் வாழ்வனுபவங்களை தன் வரலாறாக எடுத்துரைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஊர்மிளா பவார் தனது நூலின் தொடக்கத்தில் விளக்கியுள்ளார். நெடுநாட்களாகத் தொடரும் பெருங்கடன் ஒன்று எனக்கிருப்பதை நான் இங்கே முதலில் கூறியாக வேண்டும். எனது கிராமத்தின் துயரப்படும் பெண்கள் தங்கள் வாழ்க்கையின் தினசரித் தேவையை சமாளிக்க பயங்கரமான தலைச்சுமையுடன் அன்றாடம் மலைமீது ஏறி இறங்குகிறார்கள். தங்களது பயணத்தின் போது என்னையும் தங்கள் தோள்களில் சுமந்து சென்றார்கள். எனது குழந்தைப் பருவத்தில் என்மீது மிகவும் பரிவு காட்டினார்கள். அத்தனை எளிதில் தீர்ந்து விடக்கூடியதல்ல என்றாலும் அதனை திருப்பிச் செலுத்த முயன்றேன். அதற்காகவே எனது குழந்தைப் பருவம் முதல் எழுதத் தொடங்கினேன்எனத் தன் வரலாற்றினை பதிவுசெய்துள்ளார் ஊர்மிளா பவார். இவரது படைப்பும் வாழ்வும் முதிர்ந்த எழுத்தளாரின் பக்குவத்தை வெளிப்படுத்;துவதாக அமைந்திருந்தது என்பது மட்டும் ஆச்சரியம் கலந்த உண்மையாகும்.
லட்சுமி எனும் பயணி (பட்டறிவுகளைப் பேசும் சுயசரிதை நூல்)
  மகளிர் ஆணையம் தலைமைக்குழு உறுப்பினரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்களின் மனைவியுமான இலட்சுமி எழுதிய இலட்சுமி என்னும் பயணிஎன்னும் இந்நூல், “உழைப்பு , பராமரிப்பு, உறவுப் பிணைப்பு இவற்றை ஆதாரமாகக்கொண்டு விரியும் வாழ்க்கைப் பட்டறிவுகளைப் பேசும் அபூர்வமான பதிவாகும்;” என இந்நூலின் முன்னுரையில் வ.கீதா குறிப்பிட்டிருக்கிறார். இதை வழிமொழிகிறோமோ இல்லையோ அனைவராலும் வாசிக்கப்படவேண்டிய ஒரு அற்புதமான நூல் என்று உறுதியாகக் கூறலாம். 1970 களில் இந்தியாவில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலக் கட்டங்களில் பொது வாழ்வில் ஈடுபட்ட தோழர் இலட்சுமி தம்முடைய தொழிற்சங்கப்பணி, இயக்கப்பணி தொடர்பான பட்டறிவுகளை இந்நூலில் விவரித்து எழுதியுள்ளார். பெண்ணியப்பதிப்பகமாக உருவாகியுள்ள மைத்திரி பதிப்பகம் தனது முதல் நூலாக இந்நூலை, வெளியிட்டது. தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்து இதுவரை பல நூல்கள் வெளிவந்துள்ள நிலையில், கடைநிலை ஊழியராக இயக்கப் பணியாற்றிய பெண்களின் வாழ்க்கையை இயல்பாக இலக்கிய வடிவத்தோடு பதிவு செய்யப்பட்டிருப்பது இந்நூல்தான். தனது படைப்பில் இலட்சுமி அம்மாவின் தன் வாழ்க்கையை மட்டும் படம்பிடித்துக் காட்டுவதல்லாமல், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் வரலாறு, தோழர் பெ. மணியரசன் கி. வெங்கட்ராமன் ஆகியோரது எளிமையான வாழ்க்கை, போராட்டம், நட்பு எனப் பலவற்றையும் அழகாகப் பதிவு செய்துள்ளதுள்ளார்.
வன்முறை, அடக்குமுறை அவற்றை எதிர்த்து துணிந்து நிற்பது, அன்றாட வாழ்க்கையை அவற்றின் ஊடாய் கட்டமைப்பது என நாள்தோறும் பெண்கள் கிராமங்களில், சிறு நகரங்களிலும், பெரு நகர குடிசைப்பகுதிகளிலும் பிற பகுதிகளிலும் நிகழ்த்தி வரும் வாழ்க்கைப் போராட்டம் பெண்ணியத்தின் மிக முக்கியமான களம். பெண்களின் வாழ்க்கை இன்னமும் பெரிய அளவில் ஆண்பார்வையினூடாக பாலியல் சார்ந்து கட்டமைக்கப்படுவதும் அதை எதிர்கொள்ளும் பெண்கள் அதற்குச் சவால் விடுத்து பல்வேறு தளங்களிலும் போராட்ட வாழ்வை நடத்தி வருவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறான பெண்களின் வாழ்வனுபவங்கள், வாழ்க்கை வரலாறுகள் போன்றவற்றை இலக்கியங்களில் இடம்பெறச் செய்து வாசிப்பினூடே அவர்களுக்கு புதிய வெளிச்சத்தை உருவாக்கிக்கொடுக்கும் பதிப்பகங்களின் நோக்கமும் படைப்பாளர்களி;ன் உழைப்பும் பாராட்டுதலுக்குரியது. இலட்சுமி அம்மா எழுதிய லட்சுமி என்னும் பயணிஎன்ற நூல் இவ்வாறான நோக்கங்களைக் கொண்ட  மைத்ரி பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டிருக்கும் ஒரு தன்வரலாற்று நூலாகும்.
தமிழ்த் தேசப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனின் மனைவியான இலட்சுமி அம்மாள் தான் பிறந்து வளர்ந்து படித்து ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போனது முதல், மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களோடு பழக்கம் ஏற்பட்டு அவசரநிலைக் காலத்தில் தோழர் பெ.மணியரசனைத் திருமணம் செய்துகொண்டது, அதன் பின்னர் தோழர் மணியரசன் இ.பொ.க.மார் (சி.பி.ஐ எம்) கட்சியிலிருந்து வெளியேறி வேறொரு கட்சியில் சேர்ந்து அதுவும் நிலைக்காமல் தமிழ்த்தேசப்  பொதுவுடைமைக் கட்சி தொடங்கியது வரையிலான பல்வேறு செய்திகளை இந்நூலில் எழுதியுள்ளார்.
1975 முதல் 2000 வரையிலான காலப் பகுதியில் தஞ்சையிலும் அதைச் சுற்றியிருக்கும் சிற்றூர்களிலும் நிலவிய சூழல் பற்றி நூலில் ஆங்காங்கே பதிவாகியிருக்கிறது. தன்னிடம் அன்புகாட்டாத பெற்றோர், சொந்த வீட்டில் தான் பட்ட இன்னல்கள், தன் வாழ்வில் அனுபவித்த வறுமை எனத் தன் இளம் பருவக் காலத்தை அவர் விவரித்திருக்கும் விதம் சிறப்பானது. இளம் பெண்ணாக, தாயாக, குடும்பத் தலைவியாக ஒரு பெண் தன் வாழ்வில் எதிர்கொண்ட சவால்கள் பலப் புதினங்களை எழுதும் அளவுக்கு அனுபவங்களைத் தந்திருக்கின்றன. அவ்வப்போது காலத்தை எதிர்த்துப் போராடியவராகவும், பெரும்பாலும் காலத்தால் இழுத்துச் செல்லப்படுபவராகவும் இலட்சுமி அம்மாள் தன் வாழ்வினூடே பயணம் செய்துள்ளார். சமூகத்தின் மையத்தில் கலக்காமல் செயல்படும் இடதுசாரிச் செயல்பாட்டாளர்களிடம்கூட பொதுப்புத்தி எவ்வாறு இயங்குகிறது என்பதை தனது நூலில் மேலோட்டமாக பதிவுசெய்துள்ளார் லட்சுமி.
இந்நூலில் பேசப்படும் தலைமறைவு வாழ்க்கை, அரசியல் செயல்பாடுகளால் ஏவப்படும் வன்முறைச் செய்திகள் ஆகியவை வேறெந்த தன்வரலாற்று நூல்களிலும் காணக்கிடைக்காத அரிய செய்தியெனலாம். பெ.ம விகடன் இதழ் வாங்கி அதில் திருமாவேலன், கவின்மலர் கட்டுரைகளைப் படிக்கும்போது, தமிழர் இனம் வென்றுவிடும் எனத் தோன்றும்என்பார் இலட்சுமி அம்மா. இவரது நம்பிக்கை வாசிப்பினூடே பயணப்படுகையில் வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இலட்சுமி அம்மாவின் பட்டறிவுகளை எங்கெங்கு விரிவாகப் பதிவுசெய்ய வைக்கலாம் என்பதைக் கண்டறிந்து அந்தந்த இடங்களில் இன்னும் விரிவாகப் பதிவுசெய்ய வைத்திருந்தால்; இந்நூல் இன்னும் ஆழமான தாக்கத்தையும், மிகுதியான வiவேற்பையும் பெற்றிருக்கும். இந்நூலாசிரியரை மிகஎதார்த்தமாகவும் வெள்ளந்தி குணாம்சம் கொண்டப் பெண்ணாகக் காட்டுவதைத்தான் பதிப்பாளர்களும் விரும்பினார்களோ என்னவோ. சில இடங்களைத்தவிர பெரும்பாலான இடங்களில் செய்திகளின் கோர்வையாக மட்டுமே இந்நூல் அமைந்திருக்கிறது.




வாரிஸ் டைரியின் பாலைவனப் பூ - தமிழில் எஸ்.அர்ஷியா (தன்வரலாறு)
வாரிஸ் டைரியின் பாலைவனப் பூ என்னும் நூலானது, சோமாலியா நாட்டு நாடோடிப் பெண்ணின் நெடுந்தூரப்பயணத்தை விவரிக்கும் ஒரு தன்வரலாறாகும். வாரிஸ் டைரி தனது இந்நூலினை கேத்லீன் மில்லருடன் சேர்ந்து ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதனை பாலைவனப் பூஎன்னும் பெயரில் தமிழில் மொழிபெயர்த்துத் தந்த அர்ஷியா பாராட்டப்படக்கூடியவர். சோமாலிய நாட்டு மாடல் அழகியான வாரிஸ் டைரி, தனது சமூகத்தில் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் கொடுமையை விவரிக்கும் வகையில் தனது சுய விமர்சனத்தை பாலைவனப் பூ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டு உலகின் பார்வையை தன் பக்கம் ஈர்த்துள்ளார். வாரிஸ் டைரி சிறுவயதில் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் சிறுமியாக இருந்த போது, மதம் மற்றும் சடங்கின் பெயரால் அந்நாட்டுப் பெண்களின் பிறப்பு உறுப்புகள் சிதைக்கப்படுவதையும், அதைத் தொடர்ந்து அந்தப் பெண்களின் வாழ்க்கையே போர்க்களமாக மாறுவதைக் கவனித்தும், தானும் அந்த நரகவேதனையை அனுபவித்தும் தனது நூலில் அதனை விளக்கியிருக்கிறார். தனது வாழ்வில் பிற்காலத்தில் பிரபல மாடல் அழகியாக தான் உருவெடுத்ததும் சர்வதேச ஊடகங்கள் அவரை பேட்டியெடுக்கக் குவிந்தபோது, தன்னைப்பற்றிய தற்பெருமை பேசாமல் தனது நாட்டில் நிகழும் மனித விரோதச் செயல்களையும், மனதை நோகடிக்கும் இன்னும் பல இழிசெயல்களையும் ஊடகங்களுக்கு எடுத்துரைத்தார். இதனை ஆராயப்புகுந்த ஐ.நா சபை அந்த உண்மைகளின் அடிப்படையில் இத்தகைய கொடுமைகள் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள 28 நாடுகளில் நடைபெற்று வருவதாகவும், இதுவரை 13 கோடி பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இஸ்லாமிய நாடுகளில் நாளொன்றுக்கு கிட்டத்தட்ட ஆறாயிரம் சிறுமிகள், இந்த ஆபத்துக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்ற அதிகாரப் பூர்வமான தனது அறிவிப்பை வெளியிட்டது.
நெடுங்காலமாக இந்திய மற்றும் உலகளவிலான பெரும்பான்மையான நாடுகளின் புராதன கலாசாரம் பெண்களை வெறும் போகப் பொருளாக மட்டுமே பார்க்கிறது. இன்றளவில் பல பெண்களின் வாழ்க்கை மேம்பட்டிருந்தாலும், சராசரிப் பெண்களின் வாழ்க்கையிலிருந்து விலகி அவர்களுக்கென சில வரையறைகள் வகுக்கப்பட்டிருந்ததையும், அப்பெண்களின் அகப்புற மனவேதனைகளை தன் வாயிலாக எடுத்துரைப்பதாக தனது நூலை படைத்தளித்துள்ளார் வாரிஸ் டைரி. எங்கோ முற்றத்தில் தெரியும் நிலவை ரசித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென அது நம் முகத்தில் ஓங்கி அறைந்தால் எப்படி இருக்குமோ, அது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது பெண்களின் மறைக்கப்பட்ட வாழ்க்கை குறித்த இதுபோன்ற பதிவுகள். இன்றளவும் உலகம் முழுவதும் கடந்தகால மற்றும் சமகால பெண்களின் நிலை, துயரம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. மதங்களின் பெயராலும் சடங்குகளைக் கைமாற்றும் நீட்சியாலும் பெண்களைத் தங்களின் உடமையாகக் கருதும் ஆண் வர்க்கம் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவும் அல்லது தக்கவைத்துக் கொள்ளவுமே போராடுகிறது. இதுபோன்ற ஆணாதிக்க நிலைகளை அறிந்தும் பெண் கைவிட்டுப் போய்விடக் கூடாதென்னும் சொந்தம்கொள்ளும் மனோபாவத்தால் தங்கள் மீது சுமத்தப்படும் அத்தனை விதிகளையும் கடவுளுக்காகவும் தங்களின் சந்ததிகளுக்காகவும் சிலுவை போலச் சுமப்பவர்களாகப் பெண்கள் வாழ்கிறார்கள். ஆணாதிக்கச் சமூகக் கட்டுமானத்திலிருந்து ஒரு சில பெண்கள் வெகுண்டெழுந்து தன்னிலைகளிலிருந்து மீற முயலும்போது, அவர்களை நோக்கி அனைத்துத் திசைகளிலிருந்தும் வீசப்படும் அடக்குமுறைக் கயிறுகள், பெண்ணுடலையும் அவர்களின் எண்ணங்களையும் தரைமட்டமாக்குகின்றன. அப்படியொரு அடக்குமுறையிலிந்து தன்னைத் துண்டித்துக் கொண்டவர்தான் வாரிஸ் டைரி.
நாலாயிரம் ஆண்டுகாலமாக ஆப்பிரிக்கக் கலாச்சாரத்தில் இருந்துவந்த, பெண் உறுப்புச் சிதைப்பைத் தடைசெய்வதற்காக உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய வாரிஸ் டைரியின் சேவையைப் பற்றி னுநளநசவ குடழறநச என்னும் ஆங்கில நூல் பேசுகிறது. வாரிஸ் டைரியின் பாலைவனப்பூஎன்னும் நூலின் தலைப்பானது நூலின் உள்ளார்ந்த கருத்தை நேரிடையாகப் பிரதிபலிப்பதில்லை என்றாலும், இப்பெயர் மிகப்பொருத்தமானது என்பதனை நாவலோடு பயணப்படுகையில் நாம் உணரமுடிகிறது.
சோமாலியாவில் தாரூத், ஹாவியே என்னும் பழங்குடித் தம்பதியருக்கு மகளாகப் பிறந்த வாரிஸ் டைரி, திருமண வயதை நெருங்கும்முன்னே இவரின் வாழ்க்கை மாறத் தொடங்குகிறது. ஏனெனில், தான் பிறந்த பழங்குடி இனத்திலிருந்து சிந்தனையிலும், செயலிலும் மாறுபட்டவளாய் தன் சமூகத்தை எதிர்க்கும் எண்ணமுடையவளாய் சிறுவயதிலேயே தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். மரபார்ந்த தன் சமூகத்தில் பெண்கள் எதையும் எதிர்த்துக் கேட்கும் வழக்கம் இல்லாதபோது தான் ஒரு பெண்ணாக அதைத் துணிந்து செய்கிறார். மேலும், பெண்கள் தன் சமூகத்தில் காலம்காலமாக அடிமைப்பட்டு ஆண்களின் கைப்பாவையாக வாழும் நிலையை உடைத்தெரிய வேண்டுமென நினைக்கிறார். ஐந்து ஒட்டகத்திற்காக அறுபது வயதுக் கிழவனுக்கு பதிமூன்றே வயதானத் தன்னை திருமணம் செய்துவைக்க முயலும் தந்தையை ஏமாற்றிவிட்டு, பாலைவனம் வழியாக, பலநூறு மைல்கள் நடந்தும் ஓடியும் தப்பிப்பிழைக்கிறாள் வாரிஸ் டைரி. பிறகு வீட்டுவேலை செய்பவளாக, பன்னாட்டு உணவகத்தில் தரைப் பெருக்கும் தொழிலாளியாக வயிற்றுப்பாட்டைக் கழுவி, பின்னர் மாடலாகவும், ஜேம்ஸ்பாண்ட் படத்தின் கதாநாயகியாகவும் வளர்ந்து உலகப் புகழ்பெறுகிறார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு நேர்காணல் அவரை வேறொரு தளத்துக்கு இட்டுச்சென்று விடுகிறது. அடிமனதில் ஆழமாய்த் தங்கிப்போன அழுக்கைத் துடைக்கும் முயற்சியாக, ஐ.நா சபையின் மக்கள்தொகை நடவடிக்கைக்கான பெண் உறுப்புச் சிதைப்பு தடுப்புப் பிரிவில்இணைந்துகொள்ள அழைப்பு கிடைக்கிறது. இவ்வாறு வாரிஸ் டைரி என்னும் ஒரு சிறுமியின் கால ஓட்டத்தை ஒவ்வொரு அத்தியாயங்களாக அழகாகச் சித்தரித்துக் காட்டுகிறது இந்நூல்.
நாகரீக வாழ்வின் பிரதேசத்தில் நாம் சஞ்சரிக்கும்போது அது போன்று எந்த வாழ்வுடனும் தொடர்பில்லாத பாலைவனத்தில் அடிப்படைத் தேவைகளுக்காய் சுற்றித் திரியும் நாடோடி மக்களில் இவர் மட்டும் வெளியேறுகிறார். மிருகத்தனம் நிறைந்த நாகரீக சமூகத்தைப் பற்றிய எந்தப் புரிதலும் இல்லாமல் எளிமையாக உள் நுழையும் இந்த இளம்பெண் தன்; வாழ்வில் நேரும் ஒவ்வொரு சிக்கலிலும் தான் கையாளும் முறைகளோடு விறுவிறுப்பாகவே தன் சுய விமர்சனத்தை நகர்த்திச் செல்கிறார். இந்நூலின் நாயகி வாரிஸ் டைரி சிறுமியாக இருந்தபொழுது தன் முயற்சியை, தன் வாழ்நாளை முன்நோக்கி நகர்த்துவதிலேயே முனைப்பு காட்டுகிறார். அதற்காக தொடக்கத்திலேயே, சிங்கத்தின் அருகில் குற்றுயிராய் வீழ்ந்து கிடந்தும் அதை எதிர்க்கத் துணிந்து, தான் வாழும் காலம் கடவுளின் அருளால் இன்னும் நீட்டிக்கப்படுவதாகத் தொடங்கி தமக்கு ஒரு எதிர்காலம் இருப்பதையும் குறிப்பால் உணர்த்தியே தனது சுய விமர்சனத்தை எழுதிச் செல்கிறார்.
எனவேதான், தனது நூலின் பின் குறிப்பில் நான் பேசியிருப்பது மிக முக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக் கூடத்தெரியாது. எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்ட கலாச்சாரம். அதை நான் என்னால் முடிந்த அளவிற்கு எப்போதும் பேசுவதுபோல மிக எளிதாக வெளிப்படுத்தி விட்டேன். பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான் பேசியிருக்கிறேன் என்கிறார் வாரிஸ் டைரி.
வாரிஸ் டைரியின் தன்வரலாற்றின் களம் சோமாலியாவில் தொடங்குகிறது. இந்நூலின் நாயகி தண்ணீரை நேசிப்பவளாக இருக்கிறாள். ஏனெனில், நமக்கு நேசிக்கத் தெரியாத ஒன்றாய் இருக்கிறது காரணம் நமக்கு அது எளிதில் கிடைத்துவிடுகிறது. ஆனால் நாட்காட்டி இல்லாத பாலைவனத் தேசத்தில் விழாக்கள் குறிப்பெடுத்துக் கொண்டாடப்படுவதில்லை எனும்போது மழைக்கான காலமும், மழைக்கான வேண்டுதல்களுமே இவர்களின் விழாக்களாக இருக்கிறது. முழுமையான உணவையோ நாகரீகத்தின் காற்றையோ சுவாசிக்காத இம்மக்களின் வாழ்வில் அளவிற்கு அதிகமான குழந்தைப் பிறப்பு மிகச் சாதாரணமாக இருப்பதும், தன் பெற்றோர்களையும், குடும்பத்தின் மூத்தவர்களையும் அவர்களின் முதுமைக் காலத்தில் உறுதுணையாகி நின்று காப்பாற்றுவார்கள் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதை இந்நூல் வழி அறியலாம்.
சோமாலியா என்றவுடனே நம் நினைவில் வருவது பஞ்சமும் பட்டினியும் கொண்ட ஒரு ஆப்பிரிக்க உள்நாட்டுப் போர்களால் சிதையுண்ட ஒரு தேசம் அவ்வளவே. ஆனால் அவர்களின் தேசத்தில் துறைமுக நகரான மொகதிவைப் பற்றி அழகாய் விவரிக்கிறார். அது சோமாலியாவின் விடுதலைக்கும் முன் இத்தாலியும், காலனி ஆதிக்கத்தால் அதன் தாக்கமும் காணப்படுவதாகக் கூறுகிறார். மதத்தின் பெயரால், இல்லாத ஒன்றை நினைத்து அதை தங்கள் கவுரவமாகப் பார்க்கும் ஆணாதிக்க சமூகத்தில் அதன்மூலம் பெண்கள் இழக்கும் உரிமைகளையும், உணர்வுகளையும், உயிரிழப்புகளையும் பல்வேறு சொல்லமுடியாத நோய்த் தொற்றுகளைப் பற்றியும் அதனால் அவர்கள் அடையும் துயரத்தைப் பற்றியும் இந்த ஆணாதிக்க சமூகம் கண்டு கொள்வதில்லை எனும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது. ஏனெனில், நாம்வாழும் நாகரீக சமுகத்தில் இங்கு பெண்ணுரிமைக்கானப் போராட்டம் முற்றிலுமாகவே மாறுபட்டே காணப்படுகிறது.
வாழு அல்லது மடிஎன்ற இந்த இரண்டைத் தவிர வேறேதுமில்லை என்கிறார் ஒருவர். ஏனெனில், ஒருவர் வாழ்கிறார் என்றால், அவர் வாழ்வில் எல்லாம் சரியாக நடக்கிறது என்ற அர்த்தம் அது. ஆம்! பாலைவன நாடோடி வாழ்வில் இந்த வாசகம் பொருத்தமாகப் படுகிறது. அவர்களுக்கு எதுவும் எளிதில் கிடைப்பதில்லை அவர்கள் நீரையும் ஒட்டகத்தையும் தங்கள் உயிராய் பாவிக்கிறார்கள். மருத்துவம் என்றால் என்ன எனச் சொல்லுமளவிற்கும் இந்த நூற்றாண்டில் வாழ்வது கொடுமையே. இதனால் அவர்களின் குழந்தைகள் இறந்துபோவதும், பல நேரங்களில் இறந்தே பிறப்பதும், மேலும், விருத்தச்சேதத்தால் அவர்களின் குழந்தை பிறப்பிலேயே பலவிதமான சங்கடங்குள்ளாவதையும் இந்நூல் விவரிக்கிறது.
வாரீஸின் வாழ்வில் முதன்முதலாய் ஒரு புகைப்படம் எடுத்தவர் மால்கம் பேர்சைல்ட்அவரைப் பற்றிய நல்ல சுவாரசியத் தகவலோடு நகரும் கதை இந்தப் புகைப்படத்திற்குப் பிறகு வாரிஸ்ஸிற்கு இரண்டாம் அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கிறது. இது மேலைநாடுகள் பெண்களுக்கு பாதுகாப்பைப் கொடுக்கிறது என்று நம்பும்நிலையில் உள்ளது. அதேநேரத்தில், “இங்கிலாந்தில் இளம் பெண்ணொருத்தி தனியாகத் துணையில்லாமல் இருப்பது அத்துணை உவப்பல்லஎன்று சொல்லும்போது, மீண்டும் இந்த உலகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது விடையறியா கேள்வியாகவே நம்முன் வைக்கப்படுகிறது.
மாடலிங் துறையில் அவளுக்குக் கிடைக்கும் அனுபவங்களூடே ஊடாடிப் போகும்போது தன் கடவுச்சீட்டிற்காக தான் படும் துயரங்களையும் அதற்காய் நடக்கும் திருமணங்களும் அதனால் ஏற்படும் இன்னல்களையும் விவரித்துச் செல்கிறது இரண்டாவது பகுதி. தன் குடும்பத்திலிருந்து பிரிந்த பிறகு தனிமை எப்படி தன்னை வாட்டுகிறது என்பதைச் சொல்லும்போதும் தனக்கான கணவன், குடும்பம் என்று அமையும் என ஏங்கி எதிர்பார்ப்பதாகச் சொல்லும்போதும் தன்னுள் நடந்த அந்த பாதிப்பு எப்படி உணர்வுரீதியில் தன்னை சொல்லவிடாமல் தடுக்கிறது எனும்போதும் நம்மை கண்களங்கச் செய்கிறார் வாரிஸ் டைரி.
குர் ஆன் இப்படிச் செய்யச் சொல்கிறது என்று பலர் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். உலகத்திலுள்ள அத்தனை இஸ்லாம் நாடுகளிலுமே இந்த வழக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்றபோதும், அது இப்போது பிரச்சினையில்லை. ஆனால் குர் ஆனோ அல்லது பைபிளோ கடவுள் பெயரால் பெண்களுக்கு அதை வெட்டிவிட வேண்டும்என்று எங்கும் குறிப்பிடவில்லை. இந்த வழக்கம் மிக எளிதாக, ஆண்களால் நடத்தப்படுகிறது. அவர்கள்தான் இந்தக் கோரிக்கையை வலுவாக ஆதரிக்கிறார்கள். அவர்களின் அறியாமை, சுயநலம் ஆகியவை அவர்களை ஆட்டிப்படைக்கிறது. பெண்களின் பாலின விருப்பத்துக்குத் தாங்கள்தான் உரிமையாளர்கள் என்று உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்கள். தங்கள் மனைவிகளும் உறுப்புச் சிதைப்பு செய்துகொள்ள வேண்டும் என ஆண்கள் வற்புறுத்துகிறார்கள் என்கிறார் வாரிஸ் டைரி.
மேலும், தாய்மார்களும் தங்கள் மகள் மீது இந்தக் கொடுமையைத் திணிப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஏனெனில், மகள்கள், தங்களுக்கு விருப்பமான ஆண்களோடு தொடர்பு வைத்துக்கொள்வார்களோ என்ற அச்சம் தாய்மார்களுக்கு இருந்துவருகிறது. உறுப்புச் சிதைப்பு செய்துகொள்ளாத பெண் மோசமானவள், மாசுற்றவள், காம வேட்கை கொண்டு திரிபவள், திருமணம் செய்துகொள்ளத் தகுதியற்றவள் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.
நான் வளர்ந்து வந்த நாடோடிக் கலாச்சாரத்தில் திருமணமாகாத பெண் என்ற சொல்லுக்கு இடமேயில்லை. ஆனால் தாய்மார்கள், தங்கள் மகள்களுக்கு சிறப்பான வாழ்க்கைச் சாத்தியங்கள் உருவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். மேலைநாடுகளில் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைப்பதுபோல, ஆப்பிரிக்கத் தாய்மார்கள் இந்த நடைமுறையைக் கைக்கொள்கிறார்கள். அறியாமையாலும் மூடத்தனம் நிறைந்த நம்பிக்கைகளாலும் ஆண்டுதோறும் பல லட்சம் சிறுமிகள், பிறப்புறுப்புச் சிதைவுக்கு உள்ளாக்கப்படுவதற்குத் தகுந்த காரணங்கள் ஏதுமில்லை. உடல்ரீதியான வலி, மனரீதியான வேதனை, உயிரிழப்பு போன்ற காரணங்களே மிகுந்திருக்கின்றன.
இன்றைய நாகரிக உலகிலும் பெண் உறுப்புச் சிதைப்பு என்ற கொடூரம் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவில் பெருமளவில் அரங்கேறி வருகிறது. பெண் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் மிக மோசமான வன்முறை இது. உலகம் முழுவதும் 15 கோடிப் பெண்கள் இந்த வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆண்டுதோறும் 30 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். பெண் உறுப்புச் சிதைப்பை எதிர்த்துப் போராடி வருகிறார் வாரிஸ் டைரி. உலகின் சூப்பர் மாடலாகவும் நடிகையாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதராகவும் பணியாற்றியவர். டெசர்ட் ஃப்ளவர் ஃபவுண்டேஷன்மூலம் உலகின் பல நாடுகளிலும் பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வருகிறார்.
சோமாலியா நாட்டில் வறுமை தாண்டவமாடும் ஒரு கிராமத்தில் பிறந்த வாரிஸ் டைரி,; மாடு மேய்ப்பது, தண்ணீர் கொண்டு வருவது, வீட்டு வேலைகளைச் செய்வதுதான் இவரது பணியும், அந்நாட்டில் பிறந்த பெண்களின் பணியும் என்பார். மற்ற ஆப்பிரிக்கப் பெண் குழந்தைகளைப் போலவே ஐந்து வயதில் வாரிஸ{ம் அந்தக் கொடூரத்தைச் சந்திக்க வேண்டியிருந்தது. அம்மாவிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார். கடவுளின் விருப்பம் இதுதான் என்றார் அம்மா. அப்படியானால் கடவுளுக்கு என்னைப் பிடிக்க வேண்டாம். இப்படிப்பட்ட கடவுளை எனக்கும் பிடிக்கவில்லைஎன்ற வாரிஸின் பேச்சு அம்மாவுக்குக் கலக்கத்தை உருவாக்கியது. சரி எவருக்கும் தெரியாமல் எங்காவது ஓடிவிடு என அம்மா சொன்னாள். ஒருநாள் அதிகாலை. பணம், துணி, உணவு எதையும் எடுத்துக்கொள்ளாமல். வெற்றுக் கால்களுடன் ஓட ஆரம்பித்தார் வாரிஸ். எங்கிருந்துதான் அவ்வளவு தைரியமும் தன்னம்பிக்கையும் வந்ததென்று தெரியவில்லை. இரவு, பகலாகப் பாலைவனத்தில் ஓடிக்கொண்டே இருந்தார். ஒருநாள் தூங்கி விழித்தபோது, அருகில் ஒரு சிங்கம் அமர்ந்திருந்தது. தன்னுடைய அத்தனை முயற்சிகளும் இந்தச் சிங்கத்துக்கு இரையாவதில் முடியப் போகிறது என்று எண்ணி கண்களை மூடிக்கொள்கிறார் வாரிஸ். எலும்பும் தோலுமாக இருந்த வாரிஸை உற்றுப் பார்த்த சிங்கம் அவரைத் தீண்டாமலே சென்றுவிட்டது. அங்கிருந்து நகரை நெருங்கும் நேரத்தில் ஒரு டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார் வாரிஸ். விலங்குகளைவிட மனிதர்கள் ஆபத்தானவர்கள் எனபதை அப்போதுதான் அவர் தெரிந்து கொண்டதாகக் கூறுவார்.
300 மைல்களைக் கடந்து தன் சகோதரி வீட்டுக்கு வந்து சேர்ந்த வாரிஸ், அங்கு மிக மோசமாக நடத்தப்பட்டார். வீட்டு வேலை செய்வதற்காக லண்டனில் உள்ள உறவினர் ஒருவருக்கு ஆட்கள் தேவைப்பட்டபோது, தானே முன் வருவதாகச் சொன்னார் வாரிஸ். அங்கு சில ஆண்டுகள் பணிபுரிந்த நிலையில் உறவினர் மீண்டும் சோமாலியாவுக்கே சென்றுவிடுகிறார். தனக்கு பாஸ்போர்ட் என்பதால் அங்கேயே அவர் தங்கிவிடுகிறார். மெக்டொனால்ட் உணவகத்தில் வேலை செய்துகொண்டு, ஆங்கிலம் கற்றுக்கொண்ட அவருக்கு, டெரென்ஸ் டொனொவன் என்ற புகழ்பெற்ற புகைப்படக்காரரிடமிருந்து அழைப்பு வருகிறது. வருமானம் இல்லாமல் தன்னால் லண்டனில் வாழ முடியாது. தன் அம்மாவுக்கும் பணம் அனுப்ப வேண்டும் என்ற காரணத்தால் அவ்அழைப்பை ஏற்றுக்கொள்கிறார் வாரிஸ். 1987-ம் ஆண்டு புகழ்பெற்ற பைரலி காலண்டரில் அவரது புகைப்படம் வெளியானது. அதிலிருந்து வாரிஸின் மாடலிங் பயணம் தொடங்குகிறது. அன்றிலிருந்து லீவைஸ், ரெவ்லான், சானல் போன்ற உலகப் புகழ்பெற்ற நிறுவனங்கள் வாரிஸ் வீட்டுக் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தன. விரைவில் உலகின் சூப்பர் மாடலாக மாறிய வாரிஸ் புகழ்பெற்ற ஃபேஷன் பத்திரிகைகளை அலங்கரித்து, ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்திலும் நடித்தார். கனவிலும் எதிர்பார்க்காத வசதியான லண்டன் வாழ்க்கை, உலகப் புகழ் எல்லாம் கிடைத்தாலும் வாரிஸால் பெண் உறுப்புச் சிதைப்பை மறக்க முடியவில்லை. ஐந்து வயதில் ஏற்பட்ட கொடூரம் ஒவ்வோர் இரவும் அவரது தூக்கத்தைக் கலைத்தது. புகைப்படங்களில் அவர் புன்னகை செய்தாலும் அதற்குப் பின்னால் வார்த்தைகளால் அளவிட முடியாத வலியும் வேதனையும் நிறைந்திருந்தது.
ஐந்து வயதில் நிகழ்த்தப்பட்ட அந்த வன்முறையின் பாதிப்பு உயிர் உள்ள வரை மறக்காது. ஏனெனில், உறுப்புச் சிதைப்புக்கு ஆளாக்கப்பட்ட நான்கு குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் நோய்த் தொற்றால் மரணத்தைச் சந்தித்துவிடுகின்றனர். தன் சகோதரியும் கூட அதனால் மரணத்தை தழுவியதாகக் கூறுவார் வாரிஸ். கன்னித் தன்மையைப் பாதுகாப்பதற்காக மதத்தின் பெயரால் இந்த வன்முறை நிகழ்த்தப்படுகிறது. திருமணத்தின்போதுதான் தையலை வெட்டிவிடுவார்கள். குடும்பம் நடத்துவதும் குழந்தைகளை பெற்றெடுப்பதும் இவர்களின் வாழ்வில் மரணவேதனைதான். ஏனெனில், தாயும் குழந்தையும் இறந்துவிடும் நிகழ்வே அதிகம். ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் வசிப்பவர்கள் மட்டுமில்லாமல், அங்கிருந்து வந்து ஐரோப்பாவில் வசிப்பவர்கள்கூட எவ்வளவு படித்திருந்தாலும் தங்கள் பெண் குழந்தைகளுக்கு இதைச் செய்யாமல் விடுவதில்லை. மதம் என்று வந்துவிட்டால் அங்கே கேள்விக்கே இடமேயில்லைஎன்கிறார் வாரிஸ்.
1999-ம் ஆண்டு முதல் முறையாகத் தன் வாழ்க்கையில் ஏற்பட்ட வலியையும் வேதனையையும் வெளியே சொன்ன வாரிஸ். அதற்காக வாரிஸ் ஃபவுண்டேஷன் என்ற ஒன்றையும் நிறுவினார். பின்னர் அது டெசர்ட் ஃபவுண்டேஷன்என மாற்றம் பெற்றது. இந்தப் பணிகளுக்காக ஐக்கிய நாடுகள் சபை வாரிஸ{க்குச் சிறப்பு நல்லெண்ணத் தூதுவர் பொறுப்பையும் அவருக்கு அளித்தது. ஐந்து ஆண்டுகள் அந்தப் பொறுப்பையும் திறம்படச் செய்தார் வாரிஸ். மேலும், சூடான், எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, பெர்லின், நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து போன்ற ஏராளமான நாடுகளில் வாரிஸின் ஃபவுண்டேஷன் இயங்கி வருகிறது. இவற்றின் மூலம் பெண் உறுப்புச் சிதைப்பைத் தடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்படுகிறது. ஏற்கெனவே பாதிக்கப்பட்ட பெண்களைக் கண்டறிந்து சிகிச்சையும் அளித்துவருகின்றார். பெண் குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களுக்குக் கல்வி அளிக்கப்படுகிறது.
ஆண்-பெண் சமத்துவம், பெண்ணுரிமை, பெண் கல்வி, பெண் ஆரோக்கியம், மனித உரிமைகள் போன்றவற்றுக்காகப் போராடும் வாரிஸ் டைரி, நான்கு குழந்தைகளுடன் போலந்தில் வசித்து வருகிறார். வாரிஸ் டைரியின் பாலைவனப் பூ என்னும் நூலானது, 1 கோடியே 10 லட்சம் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்ததோடு, திரைப்படமாகவும் வெளிவந்து உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களின் கவனத்தை ஈர்த்தது. இனி ஒரு குழந்தைகூடப் பெண் உறுப்புச் சிதைப்பு என்ற வன்முறைக்கு இலக்காகவில்லை என்ற நிலையை எட்ட வேண்டும் என்பதே தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வருகிறார் வாரிஸ் டைரி. ஆனால் ஆப்பிரிக்க நாடுகளில் அரசாங்கங்களின் உதவி போதுமானதாக இல்லை. மேலும், காலம் காலமாகக் கடைப்பிடித்துவரும் மத நம்பிக்கையைத் தகர்த்தெறிவது அவ்வளவு எளிதான விஷயமல்ல. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்குப் பெண்கள் காரணமல்ல. அதனால் ஆண்களிடம்தான் புரிதலை ஏற்படுத்த வேண்டும். இரண்டு ஆண் குழந்தைகளின் தாயான வாரிஸ், தன் மகன்களிடம் தெளிவை உண்டாக்கியத்தாகக் கூறுகிறார். நீங்களும் அதைச் செய்தால் போதும். தொடர்ந்து போராடுவோம். பெண் குழந்தைகளுக்கான வன்முறைகளற்ற சமூகத்தை உருவாக்குவோம்எனது கனவெல்லாம் இந்த உலகம் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் அதைநோக்கிய பயணத்திற்கு இந்த மனிதர்கள் உதவட்டும் என்ற நூலின் முடிவுரையோடு தன்னிலையை தெளிவுபடுத்தியுள்ளார் வாரிஸ் டைரி.
தெளிந்த நீரோடை போன்ற சுவாரசியமான வாரிஸ் டைரியின் எழுத்தானது வாசிக்கும் வாசகருக்கு வலியையும் வேதனையையும் அனுபவித்தத் தந்தாலும் அனைத்தையும் வென்றுவிடும் உத்வேகமும் அதனுள் உள்ளது. அதுதான் பெண் எழுத்தின், பெண் சக்தியின் வெற்றி எனக் கருதுகிறேன்.



[அடித்தள மக்கள் ஆய்வுகள் என்கிற பொருண்மையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் அம்பேத்கர் படிப்புவட்டம் ஒரு கருத்தரங்கை கடந்த ஆண்டின் இறுதியில் திட்டமிட்டிருந்தது. தவிர்விக்கவியலாத சில காரணங்களால் நிகழ்வு இரு முறை ஒத்திவைக்கப்பட்டு பிறகு கைவிடப்பட்டது.

அக்கருத்தரங்கிற்காக நண்பர் செல்லமுத்து தயாரித்து வழங்கிய கட்டுரை அவர் அனுமதியுடன் இங்கு வெளியிடப்படுகிறது. கைவசமுள்ள பிற கட்டுரைகளும் தொடர்ச்சியாக வெளியிடப்படும்.] 

No comments:

Post a Comment